12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 1 Feb 2020 4:00 AM IST (Updated: 1 Feb 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் நேற்று வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. சில வங்கிகள் மட்டுமே திறந்து இருந்தது. ஆனால், அங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வங்கி ஊழியர்கள் பணியில் இருந்ததை காண முடிந்தது. ஊட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் திறக்கப்படவில்லை. அதன் முன்பு 2 நாட்கள் நடைபெறும் வேலைநிறுத்தம் குறித்த அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தன. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து தெரியாமல் வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்கம் சார்பில், வங்கி ஊழியர்களுக்கு தற்போதைய விலைவாசிப்படி புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், குடும்ப நல ஓய்வூதிய திட்டத்தை மேம்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊட்டி ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வங்கியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கி அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

வங்கி ஊழியர் சங்கத்தினர் கூறும்போது, கடந்த 27-ந் தேதி டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் திட்டமிட்டப்படி இன்று (அதாவது நேற்று) வேலைநிறுத்தம் நடந்தது. வாரத்தில் 5 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. நாளையும் (அதாவது இன்று) வேலைநிறுத்தம் நடக்கிறது என்றனர்.

Next Story