பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து - எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கண்டித்து கடலூர் மாவட்டம் முழுவதும் எல்.ஐ.சி. ஊழியர்கள் 1 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி.(ஆயுள் காப்பீட்டு கழகம்) நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், முதல் நிலை அதிகாரிகள் சங்கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம், எஸ்.சி., எஸ்.டி. நலச்சங்கம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் நாடு முழுவதும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை ஒரு மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி கடலூரில் நேதாஜி சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஊழியர்கள், அதிகாரிகள் 1 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர்கள் அலுவலம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு எல்.ஐ.சி. ஊழியர் சங்கம் சரவணகுமார் தலைமை தாங்கினார். முதல் நிலை அதிகாரிகள் சங்கம் மோகன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் ஆனந்தன், எஸ்.சி.,எஸ்.டி. நலச்சங்கம் அறிவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எல்.ஐ.சி. ஊழியர் சங்க வேலூர் கோட்ட துணை தலைவர் மணவாளன், கடலூர் கிளைச் சங்க செயலாளர் ரேஜீ்ஸ், எஸ்.சி., எஸ்.டி. நலச்சங்கம் கந்தப்பன், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் பொதுச்செயலாளர் மருதவாணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் எல்.ஐ.சி. ஊழியர்கள், அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிளை சங்க பொருளாளர் ராஜூ நன்றி கூறினார்.
பண்ருட்டியிலும் 1 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட எல்.ஐ.சி. ஊழியர்கள், அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர்கள் சங்க தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். முதல் நிலை அதிகாரி வெங்கடேசன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகி நமச்சிவாயம், ஓய்வுபெற்ற எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தின் சார்பில் சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இந்த வேலைநிறுத்தத்தின் அவசியத்தையும், கோரிக்கைகளையும் விளக்கி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வேலூர் கோட்ட இணை செயலாளர் வைத்திலிங்கம் பேசினார். முடிவில் கிளை செயலாளர் சின்னையன் நன்றி கூறினார்.
இதேபோல் விருத்தாசலம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. அனைத்து ஊழியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நெய்வேலியிலும் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று மதியம் 1 மணி நேரம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் கிளை செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் ஜெயஶ்ரீ வரவேற்றார். கிளை மேலாளர் வேல்முருகன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் செந்தில்குமார், பொருளாளர் யோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் மூசா, நகர செயலாளர் ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
எல்.ஐ.சி. ஊழியர்கள், அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டத்தால் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பாலிசி தாரர்களிடம் பணம் பெறுவது நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story