பேராசிரியர்களுக்கு ஆதரவாக தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


பேராசிரியர்களுக்கு ஆதரவாக தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2020 4:15 AM IST (Updated: 7 Feb 2020 12:46 AM IST)
t-max-icont-min-icon

தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த மண்டபத்தூர் கிராமத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 300-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், ஊழியர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு பணியாற்றி வரும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், கடந்த சில வாரங்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆர்ப்பாட்டம்

இந்தநிலையில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி, கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று கல்லூரி வாசலில் திரண்டு கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதைத் தொடர்ந்து பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்வு வரவுள்ள நிலையில் இதுவரை பாடம் நடத்தப்படாமல் இருப்பது எங்கள் கல்வியை பாதிக்கிறது. எனவே கல்லூரி நிர்வாகம் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும் என மாணவர்கள் கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டுச்சேரி போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Next Story