திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற 28–ந் தேதி தொடங்குகிறது

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா வருகிற 28–ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திருவிழா வருகிற 28–ந் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த விழாவில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித்திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:–
மாசித் திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 28.2.2020–ந் தேதி தொடங்கி, 10.3.2020–ந் தேதி வரை வரை நடக்கிறது. இந்த விழாவுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் வசதியாக வந்து செல்ல தேவையான தங்கும் வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். பக்தர்களுக்கு தற்காலிக குடிநீர் வழங்குவதற்கான சிறு குடிநீர் தொட்டிகளை வைக்க வேண்டும். அடிப்படை வசதிகளை அதிகரிக்க வேண்டும். குடிநீர் வழங்கும் அனைத்து தொட்டிகளை நன்றாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். மின்சாரத் துறையின் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.
குப்பைகளை உடனுக்குடன்...
பக்தர்கள் அதிகமாக வருகை தருவதால் ஏற்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட கோவில் பகுதியிலும், பேரூராட்சி பகுதியிலும் கூடுதல் துப்புரவு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவ சேவை வழங்கும் வகையில் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். மேலும், இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்சு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மூலம் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு கூடுதல் வாகனம் மற்றும் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். கடலில் அதிக நபர்கள் குளிப்பதால் மீன்வளத்துறை மூலம் படகுகள் மற்றும் அவசர காலத்தில் உதவும் வகையில் மீனவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாசி திருவிழா சிறப்பாக நடைபெற அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் அம்ரீத் பழனியப்பன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர்கள் தனப்பிரியா (திருச்செந்தூர்), விஜயா (கோவில்பட்டி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், உதவி ஆணையர் (கலால்) சுகுமார், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பரத் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story