போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றிய வடமாநில வாலிபர் கைது


போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றிய வடமாநில வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2020 10:00 PM GMT (Updated: 12 Feb 2020 2:07 PM GMT)

போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றிய வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வள்ளியூர், 

போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றிய வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. 3, 4–வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடக்கிறது. மேலும் 5, 6–வது அணு உலைகள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது.

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இங்கு பல்வேறு பணிகள் நடந்து வருவதால் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். கட்டிட பணிகளுக்காக வடமாநில ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் இங்கு பணியாற்றி வருகின்றனர். இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்காக தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதன்பின்னர் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய அனுமதி வழங்கப்படும்.

போலி தடையில்லா சான்றிதழ் 

அப்படி இருந்தும் போலி தடையில்லா சான்றிதழ் பெற்று கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக ஒருவர் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அதாவது, ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் துங்கிரா கிராமத்தை சேர்ந்தவர் சக்கரதார் பீர்தான் (வயது 24). இவர் ஒடிசா பட்டாபூர் போலீஸ் நிலையத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் தொழிலாளியாக சேர்ந்தார்.

அவர் கொடுத்த தடையில்லா சான்றிதழை அதிகாரிகள் பார்த்தபோது, அது போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சக்கரதார் பீர்தானை பிடித்து கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது 

இதுகுறித்து கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதா வழக்குப்பதிவு செய்து, போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்ததாக சக்கரதார் பீர்தானை கைது செய்தார். பின்னர் அவரை வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போலி தடையில்லா சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story