துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்படுத்தப்படுமா? வீரர்-வீராங்கனைகள் எதிர்பார்ப்பு


துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்படுத்தப்படுமா? வீரர்-வீராங்கனைகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 13 Feb 2020 9:30 PM GMT (Updated: 13 Feb 2020 3:56 PM GMT)

ஈரோட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை செயல்படுத்த வேண்டும் என்று வீரர்-வீராங்கனைகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு, 

துப்பாக்கி சுடும் போட்டியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சிறந்த பயிற்சிகளை பெற்று மாநிலம், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்கள். ஆனால் ஈரோட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இல்லாததால் வீரர்கள் பலர் முறையான பயிற்சி பெற முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும், அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று பயிற்சி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

ஏழ்மை நிலையில் உள்ள வீரர், வீராங்கனைகள் அதிக பணம் செலவழித்து பயிற்சி பெற முடியாததால் பல்வேறு வாய்ப்புகளை இழந்து விடுகின்றனர். எனவே ஈரோட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை அமைக்க வேண்டும் என்று வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து பெருந்துறை பவானிரோட்டை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரரான இலக்கியசெல்வன் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வமாக தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். இதில் 2 பேர் சர்வதேச போட்டியிலும், 8 பேர் தேசிய அளவிலான போட்டியிலும், 40 பேர் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று உள்ளனர். ஒருவர் சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் பெற்று ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதேபோல் ஏராளமானவர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போதுமான வழிகாட்டுதல் இல்லை. ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியும்.

ஈரோடு மாவட்டத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இல்லாததால் வெளிமாவட்டங்களுக்கு சென்று பயிற்சி பெற வேண்டியுள்ளது. இதற்கு ஒருசில மையங்களில் லட்சக்கணக்கில் கட்டணம் கேட்கிறார்கள். ஏழ்மையில் இருப்பவர்களால் பணத்தை செலுத்த முடிவதில்லை. இதனால் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பது என்பது, எட்டாக்கனியாகவே உள்ளது. பலரது கனவுகளும் தகர்க்கப்படுகிறது. ஈரோட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தோம்.

நீண்ட நாட்களாக விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பிறகு கடந்த 2018-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. இதற்காக இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வீரர், வீராங்கனைகளின் நலன் கருதி ஈரோடு மாவட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story