பேரூராட்சி செயல் அதிகாரிக்கு கண்டனம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அரசுபணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ரத்து - தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விளக்க கூட்டம் நடந்தது


பேரூராட்சி செயல் அதிகாரிக்கு கண்டனம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அரசுபணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ரத்து - தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விளக்க கூட்டம் நடந்தது
x
தினத்தந்தி 13 Feb 2020 10:30 PM GMT (Updated: 13 Feb 2020 10:37 PM GMT)

பேரூராட்சி செயல் அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்து தஞ்சையில் அரசு பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு விளக்க கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை மண்டலத்தில் உள்ளது முத்துப்பேட்டை பேரூராட்சி. இங்கு வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு கட்டண பாக்கிக்கு, பேரூராட்சி தெருவிளக்கு மின்பணியாளர் கோபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று மாலை அரசு பணியாளர் சங்கத்தினர் திரண்டனர். இதையடுத்து அவர்களுடன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹீன்அபுபக்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மாநிலதலைவர் சிவக்குமார், பேரூராட்சி பணியாளர் சங்க மாநில தலைவர் பழனிவேல், திருவாரூர் மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை மண்டல பேரூராட்சி செயல்திறன் வாய்ந்த உதவியாளர் சங்க தலைவர் முரளிதரன், மாநில துணைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் குணசீலன், நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொருளாளர் நெடுஞ்செழியன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மாவட்டசெயலாளர் தரும.கருணாநிதி நன்றி கூறினார்.

முன்னதாக அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘‘முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அதிகாரி குடிநீர் இணைப்பு கட்டண பாக்கிக்காக மின் பணியாளர் கோபி என்பவருக்கு ரூ.52 லட்சத்து 34 ஆயிரத்து 734-ம் பொறுப்பாக்கி மாதந்தோறும் சம்பளத்தில் ரூ.10 ஆயிரம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டார். இது முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த பணியாளர் விரோத போக்கை கண்டித்தும், அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம்.

இந்த நிலையில் இது குறித்து பேரூராட்சி உதவி இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 2 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் மின் ஊழியர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பேரூராட்சி உதவி இயக்குனருக்கு நன்றி தெரிவித்ததோடு, ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப் பட்டது’’என்றார்.

Next Story