ஆனைமலை அருகே, மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி

ஆனைமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆனைமலை,
கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டணத்தை சேர்ந்தவர் கார்த்தி (வயது 23). இவர் தனியார் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது சகோதரருக்கு பிறந்தநாள். அதை கொண்டாட கார்த்தி தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த வீரன் மகன் ஆனந்தகுமார் (23) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மீனாட்சிபுரத்திற்கு சென்றார்.
அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்து விட்டு, இரவு 10 மணியளவில் கார்த்தி, ஆனந்தகுமார் இருவரும் மலையாண்டிபட்டணத்துக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை ஆனந்தகுமார் ஓட்டினார். மோட்டார் சைக்கிள் வளந்தாயமரம் பகுதி அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், ஆனந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கார்த்தி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திம்மங்குத்து அரிஜன காலனியை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் கார்த்திகேயன் (17) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பொள்ளாச்சி போடிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் அசோக்மணி (18) படுகாயமடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த கார்த்தி, அசோக்மணி ஆகியோரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அசோக்மணி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி பரிதாபமாக இறந்தார். கார்த்திக்குக்கு அம்பரம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, விபத்தில் உயிரிழந்த ஆனந்தகுமார், கார்த்திகேயன் ஆகியோரது உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனைமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில், 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story