தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை

தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சி வார்டு பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒப்பந்த அடிப்படையிலும் 200-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மாநகராட்சி வார்டு பகுதிகளில் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்ப்பவர்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மாநகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். அப்போது, மாநகராட்சியில் 16 ஆண்டுகளுக்கும் மேல் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்க்கிறோம்.
இந்த நிலையில் எங்களுக்கு பணி வழங்கும் ஒப்பந்தகாரருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அப்படி நியமனம் செய்தால் எங்களுக்கு மீண்டும் பணி கிடைக்குமா? என்பது தெரியவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் தொகுப்பூதிய அடிப்படையில் எங்களுக்கு துப்புரவு பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் போராட்டக்காரர்கள் சார்பாக சிலர் மட்டும் சென்று மாநகராட்சி அதிகாரிகளிடம் இதுதொடர்பாக மனு கொடுத்தனர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மதியம் 3 மணிக்கு துப்புரவு பணிக்கான ஒப்பந்ததாரரை நியமிப்பது தொடர்பான டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்க்கும் துப்புரவு தொழிலாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story