தமிழகத்தில் ஏழைகளுக்கு 3 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் ஏழைகளுக்கு 3 லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கடத்தூர்,
கோபியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு, பள்ளிவாசலில் உள்ள உலமாக்களுக்கு மாத ஓய்வூதிய தொகையை ரூ.1,500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. ஹஜ் பயணிகளுக்காக ரூ.15 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு என்றைக்கும் முஸ்லிம்களை பாதுகாக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. ஆகையால், அவர்கள் அச்சப்பட தேவையில்லை.
ஒவ்வொரு தொகுதி வாரியாக உள்ளாட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆலோசித்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் அதிகாரிகள் 3 நாட்கள் முகாமிட்டு தேவையான வளர்ச்சிப்பணிகளை செயல்படுத்த உள்ளனர்.
தமிழகத்தில் வீடு இல்லாத ஏழைகளுக்கு 3 லட்சம் வீடுகள் கட்டித்தரவும், குடிசையில்லாத மாநிலமாக உருவாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கோபியில், நெடுஞ்சாலைத்துறையில் சிறப்பு கோட்டம் உருவாக்கப்பட உள்ளது. அதன் மூலம் சாலையில்லாத இடங்களில் விரைவில் தார் சாலைகள் அமைக்கப்படும்.
மாநகராட்சிக்கு உள்பட்ட பள்ளிக்கூடங்களில் தனியார் மூலமாகத்தான் காலை உணவு வழங்கப்படுகிறது. விரைவில் நகராட்சி பகுதிகளிலும் காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வுக்கு சிறப்பு பயிற்சி என்ற நிலை இல்லை. தனியாா் பள்ளிகளில் இரவு 10 மணிக்கு மேல் நடைபெறும் சிறப்பு வகுப்புகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹெல்ப் லைன் மூலம் கடந்தாண்டு 1 லட்சத்து 72 ஆயிரம் போ் பதிவு செய்திருந்தனா். அதன் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு இடா்பாடு ஏற்படும் போது அவா்களுக்கு எடுத்துச்சொல்ல அது ஏதுவாக அமைந்துள்ளது.
நீட் தோ்வுக்கு தேவையான பாடங்கள் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்திலேயே உள்ளது. பொதுத்தோ்வு முடிந்தவுடன் அரசு பள்ளி மாணவா்களுக்கு முழு பயிற்சி அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
அதைத்தொடர்ந்து அளுக்குளியில் திறக்கப்பட்ட 288 அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் சென்று பார்வையிட்டார்.
முன்னதாக கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுடன் உள்ளாட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், தாசில்தார் ஜெயக்குமார், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் பசீர் அகமது, குணசேகரன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பிசுப்பிரமணியம், கலிங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா, பிரினியோ கணேஷ் மற்றும் ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story