சிங்கம்புணரியில் வடமாடு மஞ்சுவிரட்டு: காளைகளுடன் மல்லுக்கட்டிய இளைஞர்கள்
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் மாசி மாத சிவராத்திரி விழாவையொட்டி நடந்த வடமாடு மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளுடன் ஏராளமான இளைஞர்கள் மல்லுக்கட்டினர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் மாசி மாத சிவராத்திரி விழாவையொட்டி ஐந்துநிலை நாட்டார் சிங்கம்புணரி கிராமத்து இளைஞர்கள் சார்பில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.
கோவில் பின்புறம் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, மணப்பாறை போன்ற பகுதிகளில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டன.
ஒவ்வொரு மாட்டிற்கும் 9 வீரர்கள் கொண்ட குழுவினர் களத்தில் இறங்கினர். ஒவ்வொரு குழுவிற்கும் 25 நிமிடங்கள் கொடுக்கப்பட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா தொடங்கியது.
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, பொன்னமராவதி, திண்டுக்கல் போன்ற பகுதிகளிலிருந்து மாடுபிடி வீரர்கள் ஏராளமானோர் மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளுடன் மல்லுக்கட்டினர். அனேக மாடுகள் பிடிபடாமல் வெற்றி பெற்றது.
பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் சிறப்பு பரிசாக ஆடு, மின் விசிறி, சில்வர் குடம், அண்டா, கட்டில், வெள்ளிக்காசுகள், ரொக்கப் பணம் போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் மற்றும் கவுன்சிலர் பொன்னப்பட்டி பொன்மணி பாஸ்கரன், ஒன்றியக் குழு துணை தலைவர் சரண்யா ஸ்டாலின், புசலியம்மாள் மருத்துவமனை மருத்துவர் அருள்மணி நாகராஜன், தொழில் அதிபர் மல்லா கோட்டை ராதாகிருஷ்ணன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்க முயன்ற சில மாடுபிடி வீரர்களுக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டன. சிங்கம்புணரி மருத்துவமனை மருத்துவர்கள் காயம்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
Related Tags :
Next Story