குமரி மாவட்டத்தில் பரவி வரும் தென்னை வாடல் நோயை கட்டுப்படுத்த வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


குமரி மாவட்டத்தில் பரவி வரும் தென்னை வாடல் நோயை கட்டுப்படுத்த வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Feb 2020 11:30 PM GMT (Updated: 27 Feb 2020 9:57 PM GMT)

குமரி மாவட்டத்தில் பரவி வரும் தென்னை வாடல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி ரேவதி முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் சத்தியஜோஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணபாலன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் நடராஜ குமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் பாலகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு:-

கோரிக்கை

குமரி மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக பேச்சிப்பாறை அணை தூர்வாருதல், புத்தன் கால்வாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குமரி மாவட்டத்தில் தென்னை வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. அதை கட்டுப்படுத்த வேண்டும். ஊட்டு கால்வாய் பராமரிப்பு பணிகளை வேளாண் பொறியியல் துறை மேற்கொள்ளாமல் உள்ளது. எனவே ஊட்டு கால்வாயை பராமரிக்க வேண்டியது அவசியம். ராஜாக்கமங்கலம், முட்டம் கிளை கால்வாய்களில் தண்ணீர் முறை வைத்து விடுகிறார்கள். இதனால் கடைவரம்பு பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. எனவே தினசரி தண்ணீர் திறக்க வேண்டும். புத்தளம் அரியநாயக்கபுரம் கால்வாய் வழியாக கடல்நீர் விவசாய நிலத்துக்குள் புகுகிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் கூறினர்.

அதிகாரிகள் விளக்கம்

இதற்கு பதில் அளித்து அதிகாரிகள் பேசுகையில், “பேச்சிப்பாறை அணையை தூர்வாரும் திட்டம் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. தூர்வார அரசு அனுமதி அளித்தால் உடனே பணி மேற்கொள்ளப்படும். தென்னை வாடல் நோயை கட்டுப்படுத்த ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்த கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் நோயை கட்டுப்படுத்த முடியாது. குமரி மாவட்டத்தில் தென்னை வாடல் நோயை மஞ்சள் ஒட்டுமுறை மூலம் கட்டுப்படுத்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து விவசாயிகளும் ஒன்றாக மஞ்சள் ஒட்டுமுறையை பயன்படுத்தினால் நோயை கட்டுப்படுத்தலாம். வேளாண் பொறியியல் துறைக்கு, ஊட்டு கால்வாய் பராமரிப்புக்கு என நிதி ஒதுக்கீடு இல்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். ராஜாக்கமங்கலம், முட்டம் கிளை கால்வாய்களில் தினசரி தண்ணீர் திறப்பது தொடர்பாக அதிகாரிகளால் ஆய்வு நடத்தப்படும். அரியநாயக்கபுரம் கால்வாயில் ஏற்கனவே தடுப்பு அணைகள் கட்டப்பட்டு உள்ளன. கடல் நீர் புகுவதாக விவசாயிகள் கூறுவதால் ஆய்வு நடத்தப்படும்“ என்றனர்.

திடீர் பரபரப்பு

முன்னதாக கூட்டத்தில் திடீரென ஒரு விவசாயி எழுந்து குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பேச முயன்றார். அதற்கு சக விவசாயிகளும், சங்க பிரதிநிதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகள் கோரிக்கை கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக மட்டுமே பேச வேண்டும் என்றும் கூறினார்கள். இதனால் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story