திருமணம் ஆன பெண்ணுடன் வாலிபர் ஓட்டம்: தாய்-அண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை அவதூறாக திட்டியதாக கள்ளக்காதலியின் கணவர் உள்பட 3 பேர் கைது

குண்டலுபேட்டை அருகே, திருமணமான பெண்ணுடன் வாலிபர் ஓட்டம் பிடித்தார். இதனால் அந்த வாலிபரின் தாய்-அண்ணனை கள்ளக்காதலியின் கணவர் உள்பட 3 பேர் அவதூறாக திட்டினர். இதனால் அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்தனர். இதுதொடர்பாக அந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளேகால்
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பெலகவாடி கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவம்மா(வயது 42). இவரது மகன்கள் சித்தராஜ்(26), நஞ்சுண்டி(22).
அதே கிராமத்தில் வசித்து வருபவர் சாமி. இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நஞ்சுண்டிக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளனர்.
அவதூறாக திட்டினர்
இந்த கள்ளக்காதல் விவகாரம் சாமிக்கு தெரியவந்தது. இதனால் அவர் நஞ்சுண்டியையும், மஞ்சுளாவையும் கண்டித்தார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நஞ்சுண்டியும், மஞ்சுளாவும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து சாமி, அவரது தாய் ஜெயம்மா, உறவினர் கீர்த்தி ஆகியோர் கடந்த சனிக்கிழமை மகாதேவம்மாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு வீட்டில் இருந்த மகாதேவம்மா, சித்தராஜிடம் 3 பேரும் சேர்ந்து தகராறு செய்து உள்ளனர். மேலும் 3 பேரும் சேர்ந்து மகாதேவம்மா, சித்தராஜிவை அவதூறாக திட்டியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் 2 பேரும் மனம் உடைந்து காணப்பட்டனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் மகாதேவம்மாவும், சித்தராஜிவும் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி அறிந்த பேகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாதேவம்மா, சித்தராஜிவின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது சாமி, ஜெயம்மா, கீர்த்தி ஆகியோர் அவதூறாக பேசியதால் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக போலீசார் பேகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பேகூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய போதிய வசதிகள் இல்லாததால் நேற்று வரை அவர்கள் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக குண்டலுபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
3 பேர் கைது
இதற்கிடையே மகாதேவம்மாவையும், சித்தராஜிவையும் தற்கொலைக்கு தூண்டியதாக சாமி, ஜெயம்மா, கீர்த்தி ஆகியோர் மீது பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெலகவாடி கிராமத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story