திருக்கோவிலூரில், பழைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அதிரடி சோதனை


திருக்கோவிலூரில், பழைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 13 March 2020 4:00 AM IST (Updated: 13 March 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் பழைய குற்றவாளிகளை பிடிக்க போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் பகுதியில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால் மேற்கொண்டு குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பழைய குற்றவாளிகளை கைது செய்யும் வகையிலும் திருக்கோவிலூரில் போலீசாரின் புயல்வேக நடவடிக்கை எனும் ‘ஸ்டாமிங் ஆபரேசன்’ நேற்று நடந்தது.

இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 6 இன்ஸ்பெக்டர்கள், 18 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படையினர், உள்ளூர் போலீசார் என சுமார் 200 போலீசார் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் நேரில் வந்து, திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தேடப்படும் குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்கள், உள்ளூர் குற்றவாளிகள் என ஒரு பட்டியலை போலீசாரிடம் வழங்கி கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் அனைவரும் தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்று ஓட்டல்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கியிருக்கிறார்களா? என்று சோதனையிட்டனர். மேலும் சந்தேகத்துக்குரியவர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். நகரில் 6 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டை விடிய, விடிய நடைபெற்றது. இதனால் கள்ளக்குறிச்சியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story