கோவையில், காரில் ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கும்பல் கைது


கோவையில், காரில் ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கும்பல் கைது
x
தினத்தந்தி 16 March 2020 10:45 PM GMT (Updated: 16 March 2020 5:52 PM GMT)

கோவையில் ஆயுதங்களுடன் காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சிக்கியது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவையில் பதற்றமான சூழ்நிலை இருப்பதால், வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜோதி உதயராஜ் தலைமையிலான போலீசார் நஞ்சுண்டாபுரம் சோதனை சாவடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. காரில் 6 பேர் கொண்ட கும்பல் இருந்தது. போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள். காருக்குள் கத்தி, வாள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பழனிகுமார்(வயது40), சுரேஷ்குமார்(28), உசிலம்பட்டியை சேர்ந்த வீர சுபாஷ்(30), திருமங்கலத்தை சேர்ந்த மனோபாலா(27), தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன்(27), மதுரையை சேர்ந்த கார்த்திக்(35) என்று தெரியவந்தது. அவர்கள் எதற்காக காரில் ஆயுதங்களுடன் வந்தனர்? கூலிப்படையினரா? கோவையில் அசம்பாவிதம் நடத்த வந்தவர்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதான 6 பேரும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் பழனிகுமார், வீர சுபாஷ், சுரேஷ்குமார் ஆகியோர் மீது மதுரை போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் அவர்கள் வந்த கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 6 பேரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story