வெளிநாடுகளில் இருந்து வந்த 48 பேர் கண்காணிப்பு: பஸ், ஆட்டோக்களுக்கு தினமும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்


வெளிநாடுகளில் இருந்து வந்த 48 பேர் கண்காணிப்பு: பஸ், ஆட்டோக்களுக்கு தினமும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 March 2020 10:59 PM GMT (Updated: 16 March 2020 10:59 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து வந்த 48 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பஸ், ஆட்டோக்களுக்கு தினமும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது.

தூத்துக்குடி,

கொரோனா வைரஸ் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பொது இடங்கள், ரெயில் நிலையம் மற்றும் பஸ்கள், மினிபஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் ஒவ்வொரு நாளும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களில் 100 சதவீதம் சுத்தமாக வைக்க வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தான் இதுவரை வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை பொதுமக்கள் யாருக்கும் இந்த வைரஸ் தாக்கம் இல்லை. தற்போது 2-வது கட்டத்தில் உள்ளோம். அடுத்த 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை. இந்த 15 நாட்கள் பொதுமக்களுக்கு வைரஸ் பரவாமல் தடுத்தால் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும். இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் பொது இடங்களுக்கு அதிகளவில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 15 படுக்கைகள் வசதி உள்ளது. தற்போது கூடுதலாக தனி கட்டிடத்தில் ஒரு வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் படுக்கைகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்த்தப்படுகிறது. சிகிச்சைக்கான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. பரிசோதனைகளையும் நெல்லையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலேயே செய்து கொள்ள முடியும். மேலும் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 48 பேர் தொடர்ந்து வீடுகளில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையும் கண்காணிக்கப்படுகிறது. அவர்களுக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. இதில் ஒருவருக்கு அறிகுறி இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அதுபோன்று எதுவும் இல்லை. வதந்தியை யாரும் பரப்பக்கூடாது.

பொதுமக்கள் பெரும்பாலும் விழாக்கள், சினிமா தியேட்டர்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, பொதுத்துறை அலுவலகங்களில் தினமும் காலை நேரங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட உள்ளது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்குள் நுழையும் ஒவ்வொரு வாசலிலும் கைகழுவுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரி உள்ளே செல்பவரும், வெளியில் வருபவரும் கைகளை கழுவிவிட்டு தான் செல்ல வேண்டும். இதன்மூலம் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.58 ஆயிரத்து 400 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான செயற்கைகால் உதவி உபகரணங்கள் உள்பட மொத்தம் 16 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

Next Story