முதல்-மந்திரி எடியூரப்பா அழுத்தம் கொடுப்பதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்கவிடாமல் போலீசார் தடுக்கிறார்கள் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் குற்றச்சாட்டு

முதல்-மந்திரி எடியூரப்பா அழுத்தம் கொடுப்பதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்கவிடாமல் போலீசார் தடுக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
போலீசார் மறுக்கிறார்கள்
மத்தியபிரதேசத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தான் காரணம். ஜே.பி.நட்டா தலைமையில் செயல்படும் பா.ஜனதாவுக்கு ஆதரவான எந்த முடிவையும் இங்குள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எடுக்க வேண்டாம். அந்த எம்.எல்.ஏ.க்களை சந்திக்க போலீசார் எனக்கு அனுமதி மறுத்துள்ளனர். மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு அழுத்தம் இருக்கிறது. முதல்-மந்திரி எடியூரப்பா அழுத்தம் கொடுப்பதால் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்திக்கவிடாமல் ேபாலீசார் தடுக்கிறார்கள்.
நான் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறேன். இங்கு தங்கியிருக்கும் எம்.எல்.ஏ.க்கள் வாக்காளர்களாக உள்ளனர். அவர்களுக்கு கடிதம் அனுப்பவும் அனுமதி மறுக்கிறார்கள். அதிகார ஆட்டத்தை பா.ஜனதா விளையாடுகிறது. இதை அமித்ஷா தான் உருவாக்கி, செயல்படுத்தி வருகிறார். இங்கு தங்கியுள்ள 22 எம்.எல்.ஏ.க்களில் எத்தனை பேர் பணம் வாங்கியுள்ளனர் என்பது எனக்கு தெரியாது.
எங்கும் போக மாட்டார்கள்
அதனால் அவர்கள் மீது நான் குற்றம்சாட்டவில்லை. ஆனால் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், முன்னாள் மந்திரி நரோட்டம் மிஸ்ராவுடன் செல்போனில் பேசிய உரையாடல் பதிவு என்னிடம் உள்ளது. அதில் எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுப்பதாக சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார். வியாபம் உள்பட பல்வேறு ஊழல் புகார்களில் பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது. அதனால் காங்கிரஸ் அரசு நீடிப்பதை அக்கட்சி விரும்பவில்லை.
இந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவுக்கு அமித்ஷா பணத்தை வழங்குகிறார். விமானம், ஓட்டல் வாடகையை பா.ஜனதா மற்றும் ஊழல்களில் பயன் அடைந்த ஒப்பந்ததாரர்கள் செலுத்தியுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவுக்கு பின்னணியில் உள்ள கதை இது தான். அந்த 22 எம்.எல்.ஏ.க்களும் என் முன்பு வந்தால், அவர்கள் யாரும் வேறு எங்கும் போக மாட்டார்கள். அவர்களை நான் தனித்தனியாக சந்தித்தால், 5, 6 பேரை தவிர மற்ற அனைவரும் என்னுடன் வருவார்கள். 18 எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளேன். அந்த கடிதத்தை அவர்களிடம் ஒப்படைக்குமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி.யை கேட்டுக் கொண்டுள்ளேன். அந்த கடிதங்கள் வழங்குவதை வீடியோ எடுத்தால் மிகுந்த நன்றி தெரிவிப்பேன். ஆனால் வீடியோ எடுக்க அவர் மறுத்துவிட்டார்.
உண்ணாவிரதம் இருக்க முடிவு
அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு 2-வது முறையாக கடிதம் எழுதியுள்ளேன். அதை கூரியர் மூலம் அனுப்பியுள்ளேன். இதை அனுமதிக்குமாறு டி.ஜி.பி.யிடம் கூறியுள்ளேன். எம்.எல்.ஏ.க்கள் ஏற்பதாக இருந்தால் கடிதத்தை ஒப்படைப்பதாக அவர் கூறினார். அந்த எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் தாமாக இங்கு வந்துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்களின் கருத்து ஒரே மாதிரியாக உள்ளது. இது அவர்களை பிடித்து வைத்துள்ளதை உறுதி செய்வதாக உள்ளது. இதை தான் நாங்கள் முதல் நாளில் இருந்து கூறுகிறோம்.
அந்த எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அனுமதிக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிடுமாறு கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளேன். இதை கோர்ட்டு ஏற்கவில்லை. விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கு விசாரணையின்போது இதை நாங்கள் கூறியுள்ளோம். நான் மீண்டும் ஐகோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையத்தை அணுகுவேன். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன். நேற்று (நேற்று முன்தினம்) முதலே நான் உண்ணாவிரதத்தை தொடங்கி விட்டேன். உணவு உட்கொள்ளவில்லை. 6, 7 நாட்கள் வரை இதே நிலையில் தொடருவேன்.
இவ்வாறு திக்விஜய்சிங் கூறினார்.
Related Tags :
Next Story