நெல்லை ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிக்கு "தெர்மல் ஸ்கேன்" பரிசோதனை சாலைகள் வெறிச்சோடின

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு “தெர்மல் ஸ்கேன்“ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை,
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு “தெர்மல் ஸ்கேன்“ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சாலைகள் வெறிச்சோடின
கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரிகள் வருகிற 31–ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டு உள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மக்கள் அதிகம் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
நெல்லை டவுன் ரத வீதிகள், கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம், முருகன்குறிச்சி பிரதான சாலை, பாளையங்கோட்டை பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
தெர்மல் ஸ்கேன்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 11.30 மணி அளவில் மும்பையில் இருந்து தாதார் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. வழக்கமாக அந்த ரெயிலில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று குறைந்த அளவே பயணிகள் வந்தனர்.
ரெயிலில் வந்த பயணிகளுக்கு “தெர்மல் ஸ்கேன்“ (உடல் வெப்பபரிசோதனை) பரிசோதனை செய்யப்பட்டது. பயணிகள் வரிசையில் நின்று தெர்மல் ஸ்ன் பரிசோதனை செய்து கொண்டனர்.
பின்னர் பயணிகளுக்கு கைகழுவதற்காக சோப்பு ஆயில் கொடுக்கப்பட்டது. ரெயில் நிலையத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர் இந்த பரிசோதனை நடத்தினர். உடல் வெப்பநிலை அதிகமாக இருந்த பயணிகள் தனியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
நெல்லையப்பர் கோவில் உள்பட முக்கிய கோவில்கள் மூடப்பட்டன. சுகாதார துறை மற்றும் நெல்லை மாநகராட்சி சார்பில் பல இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.. நேற்று காலை வெயில் அதிகமாக இருந்தது. வெளியே பல பயணிகள் முக கவசம் அணிந்து சென்றனர். பல இடங்களில் கொரோனா பற்றிய துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் உள்ளிட்ட முக்கிய அறுவை சிகிச்சை மட்டும் செய்யப்பட்டது. மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு வருகிற 1–ந் தேதிக்கு மேல் வருமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
நகைக்கடைகள் மூடல்
பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நெல்லையில் உள்ள மிகப்பெரிய ஜவுளி கடைகள், நகைக்கடைகள் மூடப்பட்டன. சில கடைகள் வழக்கம் போல் திறந்து வைக்கப்பட்டன. அந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் மூடும் படி அறிவுறுத்தினர். இதையடுத்து அந்த கடைகள் அடைக்கப்பட்டன. நெல்லை வண்ணார்பேட்டை உள்ள ஒரு பல்பொருள் அங்காடி நேற்று காலையில் வழக்கம் போல் திறக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் கடையை மூடும்படி அறிவுறுத்தினர். ஆனால் அந்த நிர்வாகம் பல்பொருள் அங்காடியை அடைக்க முன்வரவில்லை. இதையடுத்து அங்கு பாளையங்கோட்டை போலீசார் வந்து அந்த பல்பொருள் அங்காடியை அடைத்தனர்.
Related Tags :
Next Story