சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியது: சினிமா துணை இயக்குனர் பலி - உளுந்தூர்பேட்டையில் சம்பவம்

உளுந்தூர்பேட்டையில் சாலை தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியதில், சினிமா துணை இயக்குனர் பலியானார்.
உளுந்தூர்பேட்டை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் பணியாற்றி வந்த வெளியூர் காரர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முன்தினம் பஸ்களிலும், கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் புறப்பட்டனர்.
அதே போல் சென்னையில் சினிமா துணை இயக்குனராக பணியாற்றி வந்த வினோத் காம்பிளி(வயது 26) என்பவரும் மோட்டார் சைக்கிளில் தனது சொந்த ஊரான மதுரை ஆரப்பாளையத்துக்கு புறப்பட்டார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி சாலை நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வினோத் காம்பிளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான வினோத் காம்பிளி, சமீபத்தில் வெளியான மாணிக் என்ற படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் பல்வேறு குறும்படங்களையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story