ஈரோட்டில் ஊரடங்கு: வெறிச்சோடிய வீதிகள் - பொழுதுபோக்குக்காக சுற்றித்திரிந்தவர்களுக்கு எச்சரிக்கை


ஈரோட்டில் ஊரடங்கு: வெறிச்சோடிய வீதிகள் - பொழுதுபோக்குக்காக சுற்றித்திரிந்தவர்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 March 2020 10:45 PM GMT (Updated: 26 March 2020 3:08 AM GMT)

ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் ஈரோட்டில் வீதிகள் வெறிச்சோடின. பொழுதுபோக்குக்காக சுற்றித்திரிந்தவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

ஈரோடு,

ஈரோட்டில் நேற்று ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. மாநகர் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. அரசு அனுமதியின் படி மருந்துக்கடைகள், பால் கடைகள், ஒரு சில மளிகைக்கடைகள் திறந்து இருந்தன. ஈரோடு நேதாஜி மார்க்கெட் காலை 6 மணிவரை இயங்கியது. பின்னர் மூடப்பட்டது. எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் மேட்டூர் ரோடு, ஈ.வி.என்.ரோடு, பெருந்துறை ரோடு, சுவஸ்திக் கார்னர், பன்னீர் செல்வம் பூங்கா, காளைமாடு சிலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடின.

ஈரோடு ரெயில் நிலையம் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

ஈரோடு பஸ் நிலையம் முற்றிலும் அடைக்கப்பட்டது. யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பெருந்துறை ரோட்டில் வீரப்பம்பாளையம் பிரிவு பகுதியில் தடுப்பு கம்பி வேலிகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அனைத்து பகுதிகளிலும் வாகனங்களில் வந்தவர்களை போலீசார் விசாரித்து அனுப்பினார்கள்.

மணிக்கூண்டு, மார்க்கெட், ஆர்.கே.வி. ரோடு பகுதிகளில் பொழுதுபோக்குக்காக பலரும் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தனர். அவர்களை கண்காணித்த போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ராஜாஜிபுரம் பகுதியில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் துரத்தியடித்தனர்.

மருந்துக்கடைகளில் அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் இருந்தது. அதிகமானவர்கள் வந்தால் நெரிசல் ஏற்பட்டு விடாமல் இருக்க பொது இடைவெளி நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. இதனால் இடைவெளி விட்டு பொதுமக்கள் காத்திருந்து மருந்துகள் வாங்கிச்சென்றனர்.

ரேஷன் கடைகள் அனைத்தும் திறந்து இருந்தன. ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் நெருக்கிக்கொண்டு நிற்பதை தவிர்க்க ஒரு மீட்டர் இடைவெளியில் வெள்ளை கோடுகள் போடப்பட்டு இருந்தன.

சாலைகளில் பயணித்த பலரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். சிலர் எதைப்பற்றியும் அக்கறை இன்றி வழக்கமாக சுற்றித்திரிவதைப்போன்று சுற்றித்திரிந்தனர். போலீசார் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அவர்கள் கார்கள், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். சில ஓட்டல்கள் திறந்து இருந்தன. பார்சல் உணவு மட்டும் வழங்கப்பட்டது.

Next Story