கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காலத்தில் பணிக்கு வராத அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காலத்தில் பணிக்கு வராத அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 March 2020 10:00 PM GMT (Updated: 27 March 2020 2:33 AM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காலத்தில் பணிக்கு வராத அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரசை உலக சுகாதார நிறுவனம், உலகளாவிய நோய் தொற்று என்று அறிவித்துள்ளது. இதுபோன்ற காலத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பணி தலையாய பணியாகும். எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களும் தவறாமல் பணிக்கு வர வேண்டும். மேலும் வெளியூரில் இருந்து வரும் பணியாளர்களுக்கு அலுவலகம் வர வாகன வசதி மேற்கொள்ளப்படும்.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் வருகை மற்றும் முகவரி விவரத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ‘அ’ பிரிவில் தெரிவிக்க வேண்டும். அதேபோல் வாகன வசதி தேவைப்படுபவர்கள் உடனடியாக அவர்கள் இருப்பிடத்தையும் தெரிவிக்க வேண்டும்.

மேலும் அவசரம் மற்றும் அசாதாரண சூழ்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் பணி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர வேண்டும். தவறும்பட்சத்தில் உரிய மேல்நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story