பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட் மீண்டும் திறப்பு - அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட் நேற்று மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதையொட்டி மார்க்கெட் மூடப்பட்டது.
இதனால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என பாவூர்சத்திரத்தில் தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார் தலைமையில் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் குறைந்த பணியாளர்களை கொண்டு விற்பனை செய்ய வேண்டும், அதிக கூட்டங்கள் ஏற்படாதவாறும், பொதுமக்கள் சமூக இடைவெளி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
கூட்டத்தில் தென்காசி தாசில்தார் சண்முகம், மார்க்கெட் சங்கத்தலைவர் காளிதாசன், செயலாளர் நாராயணசிங்கம், பாவூர்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகேசன், திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று மதியம் பாவூர்சத்திரம் மார்க்கெட் திறக்கப்பட்டது. இதேபோல் பாவூர்சத்திரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வணிகர்கள் சங்க நிர்வாகிகளுடன் தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார் தலைமையில் கடை நடத்துபவர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினார்.
கடையநல்லூர்
மேலும் கடையநல்லூர் மார்க்கெட்டில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தினசரி மார்க்கெட் மூடப்பட்டது. இதையடுத்து கடைகளை வேறு இடத்தில் மாற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை கலெக்டர் குணசேகர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தடுக்கும் வகையில் மறுஉத்தரவு வரும்வரை தினசரி மார்க்கெட் மூடப்படுகிறது. மேலும் இக்பால் நகர் தெப்பத்திடல், மாவடிக்கால் திருமண மண்டபம் பகுதி, பேட்டை ஜலாலியா மகால் பகுதி, பேட்டை முஸ்லிம் பள்ளிக்கூடம் பகுதி, மேலக்கடையநல்லூர் தேரடி திடல், முத்துகிருஷ்ணாபுரம் சிந்தா மதார் தர்கா பகுதி ஆகிய இடங்களில் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story