இன்று முதல் ஈரோடு பஸ் நிலையத்தில் காய்கறி - பழங்கள் மார்க்கெட் செயல்படும்; பொதுமக்கள் கூடும் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு

ஈரோடு பஸ் நிலையத்தில் காய்கறி-பழங்கள் மார்க்கெட் இன்று (சனிக்கிழமை) முதல் செயல்பட உள்ளதால் பொதுமக்கள் கூடும் பகுதி சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஈரோடு,
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் மிகப்பெரிய சந்தையாகும். இங்கு 800-க்கும் மேற்பட்ட நிரந்தர கடைகள் உள்பட சுமார் 1,500 கடைகள் இயங்கி வருகிறது. காய்கள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இங்கு வாங்க முடியும். அதிகாலை நேரத்தில் மொத்த வியாபார சந்தையும், காலை முதல் இரவு வரை சில்லரை விற்பனையும் நடைபெறும். நள்ளிரவு நேரம் தவிர எப்போதும் கூட்ட நெரிசலாகவே இந்த பகுதி இருக்கும்.
ஈரோடு, நாமக்கல் மாவட்ட பகுதிகளில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் இங்கு வந்து செல்வது வழக்கம். எனவே கொரோனா தொற்று பரவி விடாமல் இருக்க ஈரோடு மார்க்கெட்டில் முதலில் கைகழுவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இது அனைவருக்கும் நடைமுறைப்படுத்த முடியாத சாத்தியம் இருந்ததால் காய்கறி மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. சந்தை முற்றிலும் பூட்டப்பட்டது. ஆனால் பொதுமக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யவும், விவசாயிகளின் விளை பொருட்களை சந்தைப்படுத்தவும் காய்கறி மார்க்கெட் அத்தியாவசிய தேவை என்பதால் பாதுகாப்பான ஒரு பகுதிக்கு மார்க்கெட்டை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்த கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கூட்டத்தில் வியாபாரிகளின் நலன் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மார்க்கெட் பகுதி மாற்றப்படுவதாக கலெக்டர் கூறினார்.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி ஈரோடு பஸ் நிலையத்தில் அனைத்து காய்கறி மற்றும் பழக்கடைகள் செயல்படும் என்று கலெக்டர் கதிரவன் நேற்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து கடைகள் அமைக்கும் இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என அனைத்து பகுதிகளும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
பின்னர் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த பணிகளை கலெக்டர் சி.கதிரவன், ஆணையாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் இங்கு கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அனுமதி உத்தரவை கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. வியாபாரிகளிடம் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘நாளை முதல் (அதாவது இன்று) ஈரோடு பஸ் நிலையத்தில் காய்கறி -பழக்கடைகள் செயல்படும். பொதுமக்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச்செல்லலாம். காய்கறி மற்றும் பழங்கள் வாங்க வரும்போது போதிய இடைவெளி விட்டு நின்று வாங்கிச்செல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
இதுபோல் ஈரோடு சம்பத்நகர் மற்றும் பெரியார் நகர் உழவர் சந்தைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தினமும் காலை 6 மணி முதல் 9 மணிவரை செயல்படும் என்று கலெக்டர் அறிவித்து உள்ளார்.
மேலும், ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தற்போது தக்காளி மற்றும் வெங்காயம் விற்பனை செய்பவர்கள் மட்டும் இன்று (சனிக்கிழமை) வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story