சீர்காழி அருகே கோவிலின் உச்சியில் கையில் சூலம் ஏந்தி ரத்த காயங்களுடன் நின்ற பெண் - பத்திரமாக மீட்கப்பட்டார்

சீர்காழி அருகே கோவில் உச்சியில் கையில் சூலம் ஏந்தி ரத்தக்காயங்களுடன் நின்ற பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சீர்காழி,
நாகை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செங்கமேட்டில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உச்சியில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத ஒரு பெண் ரத்த காயங்களுடன் கையில் சூலம் ஏந்தியபடி நின்று கொண்டிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சீர்காழி போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் தீயணைப்பு வீரர்கள் கோவிலுக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
அப்போது கோவிலின் உச்சியில், கையில் சூலத்தை வைத்து கொண்டு ரத்த காயங்களுடன் நின்ற அந்த பெண்ணை பத்திரமாக கீழே இறக்கினர். மீட்கப்பட்ட அந்த பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. உடனே அந்த பெண், சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story