மயிலாடுதுறை, சீர்காழியில் மார்க்கெட்டுகளாக மாறிய பஸ் நிலையங்கள்


மயிலாடுதுறை, சீர்காழியில் மார்க்கெட்டுகளாக மாறிய பஸ் நிலையங்கள்
x
தினத்தந்தி 29 March 2020 9:45 PM GMT (Updated: 30 March 2020 2:54 AM GMT)

மயிலாடுதுறை, சீர்காழியில் உள்ள பஸ்நிலையங்கள் மார்க்கெட்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சீர்காழி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் ரெயில்கள், பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆதலால் அனைத்து பஸ்நிலையங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்தநிலையில் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே உழவர் சந்தை உள்ளது. இந்த உழவர் சந்தையில் போதிய இடவசதி இல்லாததால் தற்போது பொதுமக்கள் நெருக்கமாக நின்று காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆதலால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகத்திற்கு உழவர்சந்தை மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் சீர்காழி நகராட்சி சார்பில் பொதுமக்கள் இடைவெளிவிட்டு நிற்கும் வகையில் கோடுகள் வரையப்பட்டு சுகாதார வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

அதேபோல மயிலாடுதுறை நகரில் உள்ள திரு.வி.க. காய்கறி மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இந்த காய்கறி மார்க்கெட் நெருக்கடி மிகுந்த இடத்தில் செயல்பட்டு வந்தது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மயிலாடுதுறை பஸ் நிலையங்களில் காய்கறி மார்க்கெட் அமைக்க அரசு முடிவெடுத்தது. அதன்படி மயிலாடுதுறை திரு.வி.க. மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த காய்கறி கடைகள் அனைத்தும் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. 

Next Story