பேரணாம்பட்டு அருகே, மோட்டார்சைக்கிளில் சென்றவரை விரட்டிய சிறுத்தை - கால்நடைகளை வேட்டையாட பதுங்கியதால் விவசாயிகள் கலக்கம்


பேரணாம்பட்டு அருகே, மோட்டார்சைக்கிளில் சென்றவரை விரட்டிய சிறுத்தை - கால்நடைகளை வேட்டையாட பதுங்கியதால் விவசாயிகள் கலக்கம்
x
தினத்தந்தி 1 April 2020 4:30 AM IST (Updated: 1 April 2020 9:10 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே மோட்டார்சைக்கிளில் சென்றவரை சிறுத்தை விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடும் எனபதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் உள்ள அடர்ந்த காப்புக்காடுகளில் 5-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் குட்டிகளுடன் நடமாடி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளையும், வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் உள்ள பட்டிகளில் அடைக்கப்படும் கால்நடைகளையும் அவை வேட்டையாடி வருகின்றன. வனத்துறையினர் கூண்டுகளை வைத்து அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் சிறுத்தை அந்த கூண்டில் சிக்கவிலை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்த செந்தில் என்கிற தமிழரசன் (வயது 33) என்பவர் பேரணாம்பட்டிலிருந்து ஏரிகுத்தி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிந்தார். அப்போது ஏரிகுத்தி ஏரி பகுதியிலிருந்து அருகிலுள்ள விவசாய நிலத்திற்குள் சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

செந்திலை பார்த்ததும் அந்த சிறுத்தை மீண்டும் திரும்பி வந்தது. இதனால் பதறிய செந்தில் மோட்டார்சைக்கிளை வேகமாக ஓட்டினார். ஆனால் அந்த சிறுத்தை மோட்டார்சைக்கிளை விரட்டி வந்தது. எனினும் அதிவேகமாக மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற செந்தில் தனது ஊருக்குள் சென்றார்.

இதுபற்றி அவர் அங்கிருந்தவர்களிடம் தகவல் அளிக்கவே கிராம பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஏரிப் பகுதிக்கு வந்தபோது அங்குள்ள தோப்பில் அமைந்துள்ளபெருமாள் கோவில் வளாகத்தில் ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர் நிலத்தின் அருகே பதுங்கியிருந்தது. சஞ்சய் தனது நிலத்தில் பட்டியில் மாடுகளை கட்டி வைத்திருந்தார். அந்த மாடுகளை வேட்டையாட அருகிலிருந்த வனப்பகுதியிலிந்து சிறுத்தை வெளியேறி ஏரிப் பகுதியில் பதுங்கியிக்கலாம் என கருதப்படுகிறது.

இதனையடுத்து பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர். ஏரிகுத்தி கிராமத்தையொட்டி ஏரிப் பகுதியில் சிறுத்தை பதுங்கி கால்நடைகளை வேட்டையாட முயன்றதால் ஊருக்குள் நுழைந்து விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் சிறுத்தையை பிடித்து அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கொண்டுபோய் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story