கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கர தீ - 500 ஏக்கர் அரியவகை மரங்கள் கருகின


கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கர தீ - 500 ஏக்கர் அரியவகை மரங்கள் கருகின
x
தினத்தந்தி 2 April 2020 6:48 AM GMT (Updated: 2 April 2020 6:48 AM GMT)

கொடைக்கானல் வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 500 ஏக்கரில் இருந்த அரியவகை மரங்கள் கருகின.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ யான கொடைக்கானலில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் குளுகுளு சீசன் நிலவும். இதை அனுபவிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பார்கள். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொடைக்கானலில் வழக்கத்துக்கு மாறாக தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள், புற்கள் காய்ந்து வருகின்றன. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பெருமாள்மலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதன்காரணமாக பெருமாள்மலை பீக், வடகவுஞ்சி பகுதியில் இருந்த அரிய வகை மரங்கள், செடி, கொடிகள் பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அதிகாரிகள் தேஜஸ்வி (கொடைக்கானல்), சந்திரகுமார் (திண்டுக்கல்) ஆகியோர் தலைமையில் 7 வனச்சரகர்கள் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினரும், வத்தலக்குண்டு மற்றும் கொடைக்கானலில் இருந்து 30 தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரிய வகை மரங்கள் தீயில் எரிந்து நாசமானது. இருப்பினும் தொடர்ந்து தீ பற்றி எரிவதால் அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுபோல கொடைக்கானல் அடுத்துள்ள கரடிக்கல் என்ற இடத்தில் சாலையின் இருபுறமும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியில் சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் ஏராளமான மரங்கள் கருகின.

இதற்கிடையே பெருமாள் மலைப்பகுதியில் தனியார் தோட்டத்துக்கு ஒருவர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த தீ வனப்பகுதிக்குள் பரவியதாக தெரிகிறது. எனவே தனியார் தோட்டத்துக்கு தீ வைத்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story