ஊரடங்கு உத்தரவு மீறல்: பறிமுதலான வாகனங்களை விடுமாறு போலீசாருக்கு நெருக்கடி - அரசியல்வாதிகள், அதிகாரிகள் வற்புறுத்துவதாக புலம்பல்
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடச் சொல்லி அரசியல்வாதிகள், அதிகாரிகள் வலியுறுத்துவதால் எங்கள் பணியில் தொய்வு ஏற்படும் அவல நிலை உள்ளது என போலீசார் புலம்புகின்றனர்.
பாகூர்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஆனால் தடையை மீறி சிலர் வெளியில் சுற்றுகிறார்கள். அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.
தற்போது வரை ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 188 (அரசு அதிகாரிகள் உத்தரவை மீறுதல்) மற்றும் 269 (அஜாக்கிரதையாக செயல்பட்டு, நோயை பரப்புதல்) ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் சாதாரண நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டது. இந்த சட்டப்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் 1 மாதம் முதல், அதிகபட்சம் 6 மாதங்கள் வரை மட்டுமே தண்டனை கிடைக்கும்.
எனவே பொதுமக்கள் தேவை இல்லாமல் ஊர் சுற்றுவதை தவிர்த்து, ஊரடங்கு உத்தரவை மதித்து, வீடுகளில் இருக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து காவல்துறை, போக்குவரத்து அதிகாரிகள் தடையை மீறி வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வகையில் தெற்கு பகுதி போலீசார் அதிக அளவில் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுபோல் தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங் கள் பறிமுதல் செய்யப்படுவதால் காவல் நிலையத்தில் நிறுத்த இடமில்லாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யும்போது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஊரடங்கை மீறியவர்கள் செல்போன் மூலம் தகவல் தெரிவித்து அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகளை சிபாரிசு செய்ய வலியுறுத்துகின்றனர். அவர்களும் வேறு வழியின்றி வாகனங்களை விடுவிக்குமாறு போலீசாரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். இதனால் பணியில் இடையூறு ஏற்படுகிறது என போலீசார் வேதனையோடு கூறி புலம்புகின்றனர்.
போலீஸ் உயர் அதிகாரி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் சிபாரிசால் வாகனங்களை பிடித்த போலீசாருக்கும், நிலைய அதிகாரிகளுக்கும் மரியாதை இல்லாத நிலையில், சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர்.
Related Tags :
Next Story