கூடலூர் அருகே வீடு, ஆட்டோவை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் - கிராம மக்கள் பீதி


கூடலூர் அருகே வீடு, ஆட்டோவை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் - கிராம மக்கள் பீதி
x
தினத்தந்தி 9 April 2020 5:08 PM IST (Updated: 9 April 2020 5:08 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வீடு, ஆட்டோவை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் அருகே பால்மேடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டம் உள்ளது. இது தவிர ஏராளமான வீடுகள் உள்ளது. தேயிலை தோட்டத்தை ஒட்டி உள்ள வனத்தில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி வெளியேறி ஊருக்குள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் பால்மேடு கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு 2 காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவராமன் என்பவரது வீட்டை காட்டுயானைகள் சேதப்படுத்த தொடங்கின. இதனால் பயந்துபோன சிவராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் உள்பக்க அறைக்குள் சென்று பதுங்கினர். பின்னர் வீட்டின் பின்பக்கம் மற்றும் சமையல் அறையை காட்டு யானைகள் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோவையும் காட்டு யானைகள் உடைத்தன. இதில் ஆட்டோ சேதம் அடைந்தது. இதனிடையே காட்டு யானைகளின் அட்டகாசத்தை அறிந்த கிராம மக்கள் நள்ளிரவு 2 மணிக்கு திரண்டு வந்தனர். பின்னர் பல கட்டங்களாக போராடி காட்டு யானைகளை விரட்டியடித்தனர். இதையடுத்து காட்டு யானைகள் தேயிலை தோட்டத்துக்குள் சென்றது. அதன்பின்னரே கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஊருக்குள் வந்து வீடுகள், உடமைகளை சேதப்படுத்தி வருகிறது. இதற்கு உரிய இழப்பீடு தொகையும் வனத்துறையினர் தருவது இல்லை. தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் சேதம் அடைந்த வீட்டை சீரமைக்க கட்டுமான பொருட்களும் வாங்க முடியாமல் உள்ளது. இதனால் பாதுகாப்பின்றி இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சேதம் அடைந்த வீடு மற்றும் ஆட்டோவுக்கான இழப்பீடு தொகையை வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story