கதக்கில் 80 வயது மூதாட்டி உயிரிழப்பு: கர்நாடகத்தில் கொரோனா பலி 6 ஆக உயர்வு - ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு

கதக்கில்கொரோனாவுக்கு மூதாட்டி ஒருவர் பலியாகியுள்ளார். இதன் மூலம் அந்த வைரசுக்குகர்நாடகத்தில்பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.மேலும் நேற்று ஒரே நாளில் 16 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசுக்கு 175 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதே போல் நேற்று முன்தினம் வரை அந்த கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் கதக்கில் கொரோனா பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது மூதாட்டி நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரேனாவுக்கு நேற்று புதிதாக மேலும் 16 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவுக்கு பாதித்தோரின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று கொரோனாவுக்கு 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெலகாவியை சேர்ந்த 50 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர். மைசூரு மாவட்டத்தை சேர்ந்த 55 வயது நபர் மற்றும் 68 வயது முதியவர் ஆகியோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும், ஏற்கனவே கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்துள்ளனர். மண்டியாவை சேர்ந்த 32 வயது இளைஞருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தனியார் மருந்து நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
பாகல்கோட்டையை சேர்ந்த 4 வயது குழந்தை, 13 வயது சிறுவன், 9 வயது சிறுமி ஆகியோருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள். பெங்களூருவை சேர்ந்த 19 வயது பெண் மற்றும் 27 வயது இளைஞருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் டெல்லிக்கு சென்று வந்தவர்கள். சிக்பள்ளாப்பூரை சேர்ந்த 48 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பெலகாவியை சேர்ந்த 40 வயது பெண் மற்றும் 22 வயது வாலிபர் ஆகியோருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரும் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். தார்வாரை சேர்ந்த 27 வயது இளைஞர் டெல்லி சென்றுவிட்டு திரும்பினார். அவருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த 66 வயது மூதாட்டி, 42 வயது நபர், 27 வயது இளைஞர் ஆகியோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்து வருகிறது.
கொரோனா பாதித்த 16 பேரும் அவரவர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை கொரோனா பாதித்தவர்களில் 30 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 17 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலை தேறி வருகிறது.
கொரோனா பாதித்தவர்களில் பெங்களூருவில் 67 பேர், மைசூருவில் 37 பேர், தட்சிண கன்னடாவில் 12 பேர், உத்தர கன்னடா, சிக்பள்ளாப்பூரில் தலா 9 பேர், கலபுரகியில் 7 பேர், பல்லாரியில் 6 பேர், தாவணகெரே, உடுப்பியில் தலா 3 பேர், தார்வாரில் 2 பேர், குடகுவில் ஒருவர், பீதரில் 10 பேர், பாகல்கோட்டையில் 7 பேர், பெலகாவியில் 10 பேர், பெங்களூரு புறநகரில் 3 பேர், மண்டியாவில் 5 பேர் உள்ளனர். .
கொரோனா அறிகுறியுடன் நேற்று ஒரே நாளில் 70 பேர் மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அரசின் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story