கொரோனா பாதித்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைப்பது பற்றி அரசு தெளிவுப்படுத்த வேண்டும் - குமாரசாமி வலியுறுத்தல்


கொரோனா பாதித்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைப்பது பற்றி அரசு தெளிவுப்படுத்த வேண்டும் - குமாரசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 April 2020 5:34 AM IST (Updated: 12 April 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பாதித்த பகுதிகளுக்கு ‘சீல்’ வைப்பது பற்றி அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வலியுறுத்தி உள்ளார்.

பெங்களுரு, 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவியில் கூறியிருப்பதாவது:-

பெங்களூருவில் சில பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. உணவு, மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் குறித்து அரசு தெளிவான விவரங்களை கூறவில்லை. இதனால் மக்கள் அவற்றை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் இன்னொரு பிரச்சினை உருவாகும் நிலை உள்ளது. அதற்கு முன்பு மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், மருந்து கடைகளை திறக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அந்த கடைகள் மூடப்பட்டால், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாவார்கள். மாநிலத்தில் பல பகுதிகளை ‘சீல்’ வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாக வருகின்றன. அப்படி என்றால் எந்தெந்த மாவட்டங்கள் ‘சீல்’ வைக்கப்படுகின்றன?, ஏன் ‘சீல்’ வைக்கப்படுகின்றன? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் பொய் செய்திகள், வதந்திகள் மக்களின் கவனத்தை திசை திருப்பும்.

நேரடியாக கொள்முதல்

கர்நாடகத்தில் திராட்சை, வாழை, தர்பூசணி, மாம்பழம், பூக்கள், தக்காளி உள்ளிட்ட விளைபொருட்களை சாகுபடி செய்த விவசாயிகள் அதை விற்பனை செய்ய முடியாமல் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இதனால் அந்த பழங்களை சாலையோரங்களில் கொட்டிவிட்டு செல்லும் நிலை இருக்கிறது. பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள் அதை தீர்த்து வைக்கிறோம் என்று அரசு சொல்கிறது. ஆனால் அந்த பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசு உரிய அக்கறை செலுத்தவில்லை.

விவசாய விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து, மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இதில் அரசு மேலும் தாமதம் செய்யக்கூடாது. இந்த பணியை அரசு அவசரகதியில் மேற்கொள்ள வேண்டும். சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் பிரச்சினையில் சிக்கியுள்ளனர். விவசாயிகளுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் விவசாயிகள் புதிதாக பயிரிட தேவையான விதைகள், உரம், கிருமிநாசினி மருந்துகள் இருப்பு இருப்பதாக அரசு கூறுவது நகைச்சுவையாக உள்ளது.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story