அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டதால் கொரோனா தடுக்கப்பட்டுள்ளது - நாராயணசாமி பேட்டி


அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டதால் கொரோனா தடுக்கப்பட்டுள்ளது - நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 12 April 2020 2:42 PM IST (Updated: 12 April 2020 2:42 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டதால் கொரோனா தடுக்கப்பட்டுள்ளது என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி, 

புதுவை சட்டசபையில் உள்ள கேபினட் அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, அரசு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையின் போது 13 மாநில முதல்-அமைச்சர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அனைவரும் எந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படக் கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர். அவர்களுக்கு உதவிட மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஒவ்வொரு மாநிலமும் வெளியில் கடன் பெறும் தொகை அளவை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

தொழிலாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அதை பிரதமர் ஏற்கவில்லை. தற்போது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி வீதம் மூன்று மாதங்களுக்கான அரிசி வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்கான அரிசி, கோதுமை வழங்க முதல்-அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள். விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில் செய்யவும் அனுமதி கேட்டனர்.

வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று 90 சதவீதம் முதல்-அமைச்சர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களிடம் பிரதமர் மோடி கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார். பாதிப்புகளை பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என பிரித்து படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். நிதி வழங்குவது தொடர்பாக பிரதமர் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை.

புதுவை மாநிலம் சார்பில் நான் பேச பிரதமரிடம் கடிதம் கொடுத்து கேட்டிருந்தேன். ஆனால் அனுமதி அளிக்கப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.300 கோடி ஒட்டுமொத்தமாக ரூ.995 கோடி வழங்குமாறு ஏற்கனவே கேட்டிருந்தேன். அதுமட்டுமின்றி மானியமாக ரூ.300 கோடி, சரக்கு மற்றும் சேவை வரிக்கான தொகை ரூ.360 கோடி, 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல் படுத்தியதற்காக ரூ.1,800 கோடி, பட்ஜெட் மானியமாக ரூ.1,600 கோடி போன்றவற்றை மத்திய அரசு தர வேண்டியுள்ளது. என்னை பேச அனுமதி அளித்திருந்தால் அதை கேட்டு வலியுறுத்தி இருப்பேன்.

நாளை மறுநாள் எந்த விதமான நிலை எடுப்பது என்பது குறித்து அமைச்சரவையில் ஆலோசித்தோம். புதுவையையொட்டி தமிழகம், ஏனாம் அருகே ஆந்திரா, மாகி அருகே கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன. எனவே நாம் தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாகவும் ஆலோசித்தோம்.

மத்திய அரசும் சில விதிமுறைகளை வகுத்து தருவதாக கூறி உள்ளது. நமக்கு புதுவை மக்களின் உயிர் தான் முக்கியம். அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டதால் கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்தி உள்ளோம். நமது மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க பெற வேண்டும். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவை விரைவில் அறிவிப்போம்.

இப்போது விழாக்கள் நடைபெறும் காலம். இந்த காலகட்டத்தில் அதிகமாகக் கூட்டம் கூட கூடாது. இது தொடர்பாக அனைத்து மதத்தினருக்கும் அறிவுறுத்தி உள்ளோம். புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என 27 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story