பெருந்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு
பெருந்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு,
பெருந்துறை பகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பலியானார். இதைத்தொடர்ந்து பெருந்துறையில் கண்ணகி வீதி, திலகர் வீதி உள்பட 9 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாதபடியும், அங்குள்ளவர்கள் வெளியே வரமுடியாத படியும் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பெருந்துறை கண்ணகி வீதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மக்களிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஈரோடு மாநகராட்சி, கோபி நகராட்சி, கரட்டடிபாளையம், பவானி, கவுந்தப்பாடி, சத்தியமங்கலம், கண்ணகி வீதி உள்பட 10 இடங்களில் சுமார் 33 ஆயிரத்து 330 குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 66 ஆயிரத்து 806 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ குழுவினர் மூலம் கண்காணிப்பட்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் இறந்துள்ளார். பெருந்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எந்த காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிகளை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, சுகாதார துணை இயக்குனர் சவுண்டம்மாள், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் மணி உள்பட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story