ஆத்தங்குடியில் தயாரான 2 ஆயிரம் டன் ‘டைல்ஸ்’கள் தேக்கம்

ஆத்தங்குடியில் தயாரான 2 ஆயிரம் டன் டைல்ஸ்கள் தேக்கம் அடைந்துள்ளன.
காரைக்குடி,
காரைக்குடி அருகே ஆத்தங்குடியில் பாரம்பரியமிக்க டைல்ஸ் தயாரிக்கும் தொழிலில் 40-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் ஈடுபட்டுள்ளன. இந்த கம்பெனிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் டைல்ஸ் போன்று வேறு எங்கும் தயாரிக்க முடியாது. ஏனெனில் அந்த கற்களுக்கு வேண்டிய மூலப்பொருட்களின் தன்மை இந்த பகுதியில் தான் அதிகமாகவும், தரமானதாகவும் கிடைத்து வருகிறது. மேலும் இந்த ஆத்தங்குடி மண்ணுக்கும், தண்ணீருக்கும் தனித்தன்மை உள்ளதால் இங்கு தயாரிக்கப்படும் டைல்ஸ்கள் அனைவரையும் எளிதில் கவரும் வகையில் உள்ளன.
அதாவது, வாரி என்று அழைக்கப்படும் ஒரு வகை மண்ணால் தயாரிக்கப்பட்டு வருவதால் இதை வாங்கி கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் போது குளிர்காலத்தில் வெதுவெதுப்பாகவும், கோடை காலத்தில் குளுமையாக மாறும் தன்மை கொண்டதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த டைல்ஸ் தயாரிக்கும் பணிகள் தற்போது ஊரடங்கினால் முடங்கி உள்ளன.
இதனால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் டன் ஆத்தங்குடி டைல்ஸ்கள் இங்கு தேக்க நிலையில் உள்ளன.
இதுகுறித்து இந்த பகுதியில் டைல்ஸ் தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வரும் பெத்ராஜ் கூறியதாவது:-
ஆத்தங்குடியில் தயாரிக்கப்படும் டைல்ஸ் உலகம் முழுவதும் பெயர் பெற்றது. எங்கள் ஊரில் ஒவ்வொரு கம்பெனியிலும் சுமார் 40 முதல் 50 பேர் வரை இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். எனது கம்பெனியில் பெண்கள் உள்பட 40 பேர் வரை வேலை செய்து வருகின்றனர். இதில் பெண்களுக்கு தினமும் ரூ.300 வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் ஊரில் உள்ள நிறுவனங்களில் காரைக்குடி, ஆத்தங்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
தற்போது 20 நாட்களுக்கு மேலாக இங்குள்ள கம்பெனிகள் முடங்கி உள்ளன. இதனால் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பில்லாமல் அவர்கள் தற்போது வறுமையில் இருந்து வருகின்றனர். இதுதவிர இங்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வெளி மாநிலத்திற்கு சரக்கு வாகனங்களில் ஏற்றுமதிக்காக டன் கணக்கில் டைல்ஸ்கள் தேக்க நிலையில் உள்ளன. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த பாரம்பரிய மிக்க தொழில் தற்போது முடங்கி இருப்பது வேதனையாக உள்ளது.
இங்கு தயாரிக்கப்படும் டைல்ஸ் மலேசியா, சிங்கப்பூர் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு முன்பாக இந்த பகுதியில் தயாரிக்கப்பட்டு கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட போது இந்த டைல்ஸ் பதிப்பதற்காக இங்கிருந்து கொத்தனார், சித்தாள் ஆகியோர் அந்தந்த மாநிலங்களுக்கு சென்று, தற்போது அங்கிருந்து வரமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இந்த டைல்ஸ் தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story