சரக்குகள் கொள்முதல் செய்ய வணிகர்கள் பெற்ற வாகன அனுமதி மே 3-ந்தேதி வரை செல்லும் - கலெக்டர் தகவல்


சரக்குகள் கொள்முதல் செய்ய வணிகர்கள் பெற்ற வாகன அனுமதி மே 3-ந்தேதி வரை செல்லும் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 April 2020 11:15 PM GMT (Updated: 17 April 2020 10:55 PM GMT)

சரக்குகள் கொள்முதல் செய்வதற்காக வாகனங்களில் செல்ல வணிகர்கள் பெற்ற அனுமதி வருகிற 3-ந் தேதி வரை செல்லும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை, 

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டி, ஏற்கனவே வணிகர்களுக்கு சரக்குகளை கொள்முதல் செய்வதற்காக வாகனங்களில் சென்று வர மாவட்ட நிர்வாகம் 14.4.2020 வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது 3.5.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தின் மூலம் 14.4.2020 வரையிலான காலத்திற்கு பெறப்பட்ட அனுமதி கடிதத்தை 3.5.2020 வரை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக மீண்டும் அவர்கள் தனியே அனுமதி பெற தேவையில்லை. இந்த அனுமதி சீட்டு வருகிற 3-ந்தேதி வரை செல்லும்.

மேலும், பொதுமக்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அரசு அலுவலக பணியாளர்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பயணங்கள் மேற்கொள்வதற்காக கலெக்டரிடம் அனுமதி பெற வருபவர்கள் விண்ணப்ப படிவம் கொண்டு வரதேவையில்லை. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் 3 வண்ணங்களில் விண்ணப்ப படிவம் அச்சடிக்கப்பட்டு அதன் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி பொதுமக்களுக்கு பச்சை கலர் படிவ அனுமதிச்சான்றும், தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சிவப்பு கலர் படிவ அனுமதிச்சான்றும், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நீலநிற படிவ அனுமதிச்சான்றும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story