தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.80 லட்சத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.80 லட்சத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 19 April 2020 4:30 AM IST (Updated: 18 April 2020 10:41 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.80 லட்சம் மதிப்பில், கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தினமும் 70 பேருக்கு சோதனை

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த நேரத்தில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அனைத்து தரப்பினருக்கும் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.80 லட்சம் செலவில் கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் தினமும் 70 பேர் வரை பரிசோதனை செய்யலாம். இந்த ஆய்வகத்தில் 2 டாக்டர்கள், 4 டெக்னீசியன்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். 6 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை பெற முடியும்.

26 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,347 பேரின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு ஆஸ்பத்திரியில் 7 பேர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆஸ்பத்திரியில் அனைத்து உபகரணங்களும் போதுமானதாக உள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும்தான் இந்த கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் செயல்பட முடியும். நமது மாவட்டத்துக்கு இந்த ஆய்வகம் வரப்பிரசாதம் ஆகும்.

அத்தியாவசிய பொருட்கள்

மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட் கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சு தொழில், தீப்பெட்டி தொழில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தொழிற்சாலையாக இருந்தால், அவை இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஸ்ஜெயமணி, மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார், முன் னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுக நயினார் மற்றும் டாக்டர் கள், நர்சுகள் கலந்து கொண்டனர்.

Next Story