ஊரடங்கை மீறுபவர்களை அடைக்க தற்காலிக சிறை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்


ஊரடங்கை மீறுபவர்களை அடைக்க தற்காலிக சிறை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 19 April 2020 12:21 PM IST (Updated: 19 April 2020 12:21 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை மீறுபவர்களை கைது செய்து அடைக்க தற்காலிக சிறை ஏற்படுத்தப்பட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

பாகூர்,

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தி நாளை (திங்கட்கிழமை) முதல் கட்டுமான பணிகள், கிராமப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

புதுவை மாநிலத்திலும் விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ள நிலையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் நரம்பை கிராமத்தில் மீனவர்களிடையே ஊரடங்கு உத்தரவை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா நோய் அதிகமாக இருப்பதால் வியாபாரம் தொடர்பாக அந்த மாவட்டங்களுக்கு செல்வதோ, அங்கிருந்து வருவதோ தவிர்க்கப்பட வேண்டும். மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், சிறிய படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால், கடல் வழியாக மதுபாட்டில்கள், சாராயம் கடத்துவதாக தகவல் வந்துள்ளது. இதனை தடுக்க போலீசார் கண்காணித்து வருகின்றனர். மது கடத்தல் தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தெரிவிக்கவேண்டும்.

மீன்பிடி தொழிலில் ஈடுபடும் போதும், வெளியில் அத்தியாவசியமாக செல்லும் போதும் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். ஊரடங்கை மீறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். இதற்காக தற்காலிக சிறைச்சாலை ஏற்படுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் கிராம தலைவர்கள், மீனவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story