போதைக்காக 4 பேர் மருந்து குடித்த வழக்கு: தனியார் மருந்தக உரிமையாளர் சிறையில் அடைப்பு

ஊரடங்கு உத்தரவினால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
பெரம்பலூர்,
ஊரடங்கு உத்தரவினால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மது கிடைக்காததால் சம்பவத்தன்று பெரம்பலூர் திருநகரை சேர்ந்த கார்த்திக் ராஜா, பெரியார் சிலை பின்புறம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ரமேஷ், சங்குபேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்த சதீஷ்(வயது 28) ஆகிய 3 பேரும், பெரம்பலூர் தேரடி ஏரிக்கரையில் போதைக்காக மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மற்றும் காயங்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் ‘சர்ஜிக்கல் ஸ்பிரீட்’ என்ற மருந்தை குடித்தனர். பின்னர் அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்ததால், வீடு திரும்பினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து, கார்த்திக் ராஜா, ரமேஷ், சதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மது கிடைக்காததால் ஏற்கனவே பெரம்பலூர் பெரிய தெற்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் பரத் என்கிற பார்த்திபன் (34) என்பவர் போதைக்காக பெரம்பலூர் ரோவர் வளைவு அருகே உள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் ஸ்பிரீட் வாங்கி குடித்ததாகவும், அவரிடம் பழக்கம் ஏற்பட்டதால், இந்த 3 பேரும், அதே மருந்தகத்தில் ஸ்பிரீட் வாங்கி குடித்தது தெரியவந்தது. இதையடுத்து பார்த்திபனையும், 4 பேருக்கும் டாக்டரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் ஸ்பிரீட் மருந்தை கொடுத்த தனியார் மருந்தகத்தின் உரிமையாளர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த ரபீக் அலியையும்(43) போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story