ரேஷன் கடைகள் மூலம் 65 ஆயிரம் மளிகை தொகுப்பு வழங்க ஏற்பாடு

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரேஷன் கடைகள் மூலம் 65 ஆயிரம் மளிகை தொகுப்பு வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
விழுப்புரம்,
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க குறிப்பிட்ட நேரத்திற்கு காய்கறி, மளிகை கடைகள் உள்ளிட்டவை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாகவும், அவர்களுக்கு மலிவு விலையில் மளிகை பொருட்களை வழங்க அரசு முடிவு செய்து அதற்காக 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.500-க்கு ரேஷன் கடைகள் மூலமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்த தொகுப்பு பையில் ½ கிலோ துவரம் பருப்பு, ½ கிலோ உளுத்தம் பருப்பு, ¼ கிலோ கடலை பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம், மஞ்சள் தூள், டீத்தூள், மிளகாய் தூள் ஆகியவை தலா 100 கிராம், புளி, பொட்டுக்கடலை ஆகியவை தலா ¼ கிலோ, மிளகாய் வத்தல் 150 கிராம், தனியா தூள் 200 கிராம், உப்பு 1 கிலோ, பூண்டு ¼ கிலோ, சமையல் எண்ணெய் 200 மில்லி லிட்டர், பட்டை 10 கிராம், சோம்பு 50 கிராம் ஆகிய 19 வகையான பொருட்கள் இடம்பெறுகிறது.
இந்த பொருட்கள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நகர கூட்டுறவு சங்கம் மூலம் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு அவை அந்தந்த மாவட்டங்கள் வாரியாக பிரிக்கப்பட்டு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு 65 ஆயிரம் மளிகை தொகுப்பு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திற்கு விழுப்புரத்தில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை அலுவலகத்திற்கும், செஞ்சி, திண்டிவனம் ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கும், அதுபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்காக கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கும் லாரிகளில் மளிகை பொருட்கள் வரத்தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ரேஷன் கடைகள் மூலம் 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை ரூ.500-க்கு வழங்குவதற்காக தற்போது பொருட்கள் வரத்தொடங்கியுள்ளது. அனைத்து பொருட்களும் வந்திறங்கியதும் அவை தொகுப்பாக பையில் போடப்பட்டு அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் என்றனர்.
Related Tags :
Next Story