கூடலூர் அருகே பரபரப்பு: வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் - வனத்துறையினரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்


கூடலூர் அருகே பரபரப்பு: வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் - வனத்துறையினரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 21 April 2020 12:49 PM IST (Updated: 21 April 2020 12:49 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானை அட்டகாசம் செய்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், வனத்துறையினரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர்,

கூடலூர் அருகே ஏச்சம்வயல் பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு காட்டுயானை ஒன்று புகுந்தது. பின்னர் அங்குள்ள ரவீந்திரன் என்பவரது வீட்டின் பின்பக்க சுவரை இடித்து, அட்டகாசம் செய்தது. அதில் வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்தது. உடனே அங்கு தூங்கி கொண்டு இருந்த ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் எழுந்து, கதவை திறந்து வெளியே ஓடினர். தொடர்ந்து அருகில் உள்ள மற்றொருவர் வீட்டுக்குள் புகுந்து, தஞ்சம் அடைந்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையில் முன்பக்க சுவரையும் காட்டுயானை சேதப்படுத்தியது. மேலும் அரிசி, பருப்பு, காய்கறிகளை தின்றது. உடனே வன காப்பாளர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து, காட்டுயானையை விரட்டினர். தொடர்ந்து அங்கிருந்து சென்ற காட்டுயானை, அருகில் உள்ள கிருஷ்ணன் என்பவரது வீட்டின் முன்பு அடுக்கி வைத்திருந்த மூட்டைகளில் இருந்து நெல்லை ருசித்தது. மேலும் மாட்டு தீவனத்தையும் தின்றது. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு காட்டுயானை, அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டது. அதன்பின்னர் நரிமூலா ஆதிவாசி காலனிக்குள் புகுந்து, குடிசை வீட்டை சேதப்படுத்தியது. விடிய, விடிய காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டும் பலனில்லை. நேற்று அதிகாலை 4 மணிக்கு ராதாகிருஷ்ணன் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து இஞ்சி உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. அதன்பிறகு முதுமலை வனப்பகுதிக்குள் சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று, காட்டுயானை அட்டகாசம் செய்த பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது அவர்களிடம், கோவையில் அட்டகாசம் செய்த விநாயகன் காட்டுயானையை பிடித்து, முதுமலை வனப்பகுதியில் விட்டனர். அந்த யானைதான் தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. அதனை பிடித்து தெப்பக்காடு முகாமில் பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் சுனில் தலைமையில் பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் சங்கீதாராணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி அறிவுறுத்தினர். உடனே அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்தனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முதுமலை எல்லையோரம் அகழி ஆழப்படுத்தப்படும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு தொகுப்பு வீடு கட்டி கொடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. மேலும் இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம், 25 கிலோ அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து காட்டுயானை மீண்டும் ஊருக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story