நாமக்கல் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி: கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்வு

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 50 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 39 பேர் குணமாகி வீடு திரும்பி விட்டனர். மீதமுள்ள 11 பேருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த 32 வயது நபருக்கு கொரோனா தொற்று சுகாதாரத்துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் சென்னையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்தது.
தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நபர் கடந்த சில நாட்களாக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொற்று உறுதியானதால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த நபர் சிகிச்சை பெற்று வந்த தனியார் ஆஸ்பத்திரி யின் வார்டு பகுதி, ஆஸ்பத்திரி அமைந்துள்ள வீதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தினர் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள். இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 459 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் 7 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுதவிர வெளிமாநிலம் சென்று திரும்பிய 4,106 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதிதாக தொற்று கண்டறியப்பட்ட நபரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை தனிமைப்படுத்தவும், ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை நடத்தவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா தொற்று யாருக்கும் இல்லை என பரிசோதனை முடிவு வந்த நிலையில் நேற்று மீண்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story