10 வயது சிறுமி உள்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் - கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
10 வயது சிறுமி உள்பட 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை,
தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது, கோவை, திருப்பூர் மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகளவு இருந்தது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு கொசு ஒழிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
தற்போது கோவை, நீலகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றிய அரசு டாக்டர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோவை வெள்ளியங்கிரியை சேர்ந்த 28 வயது வாலிபர், ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த 20 வயது வாலிபர், வெள்ளலூரை சேர்ந்த 29 வயது பெண், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, 24 வயது பெண் என 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களை தனி வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு கொசுவை ஒழிக்கும் வகையில் புகை மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்ச லுக்கு திருப்பூரை சேர்ந்த 10 வயது சிறுமி உள்பட 5 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story