கொரோனா வைரஸ் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு


கொரோனா வைரஸ் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகள் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 April 2020 4:00 AM IST (Updated: 24 April 2020 3:54 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளை புலி உள்ளிட்ட முக்கிய விலங்குகளின் நடவடிக்கைகளை 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

வண்டலூர்,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது. இதனால் பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் பெண் புலி ஒன்றுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து உயிரியல் பூங்காவுக்கும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

அதில் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதவாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு இருந்தது. அத்துடன் பூங்காவில் விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

கண்காணிப்பு

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக பூங்கா மூடப்பட்டுள்ளது.

பூங்காவில் வெள்ளைப்புலிகள், வங்கப்புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்குகள், காண்டாமிருகம், நீர்யானை உள்ளிட்ட முக்கிய விலங்குகள் உள்ள பகுதிகளில் பூங்கா நிர்வாகம் கண்காணிப்பு (சி.சி.டி.வி.) கேமராக்களை பொருத்தி அதில் பதிவாகும் காட்சியில் விலங்குகளின் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் தொடர்ந்து 24 மணி நேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

அப்படி கண்காணிக்கும் போது விலங்குகளின் நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக பூங்கா டாக்டர்கள், விலங்குகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பீதியின் காரணமாக பூங்காவில் விலங்குகள் கூண்டு மற்றும் இருப்பிடம் பகுதியில் அடிக்கடி கிருமிநாசினி மருந்துகள் எந்திரம் மூலம் தெளிக்கப்படுகிறது.

தற்போது கோடைகாலம் என்பதால் கடுமையான வெயில் அடிக்கிறது. இதனால் பூங்காவில் உள்ள மனித குரங்குகள், கரடி ஆகியவை ஐஸ் ஸ்கிப்பில் வைக்கப்பட்ட பழங்களை ருசித்து சாப்பிட்டு உடலில் உள்ள வெப்பத்தை தணித்துக்கொள்கிறது.

Next Story