கேரளாவில் இருந்து வந்த சரக்கு வாகனத்தில் காய்கறி பெட்டிகளுக்கு கீழே மறைந்திருந்த கடையம் தொழிலாளி போலீஸ் சோதனையில் சிக்கினார்

கேரளாவில் இருந்து வந்த சரக்கு வாகனத்தில், காய்கறி பெட்டிகளுக்கு கீழே மறைந்திருந்த கடையத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் போலீஸ் சோதனையில் சிக்கினார்.
தென்காசி,
கேரளாவில் இருந்து வந்த சரக்கு வாகனத்தில், காய்கறி பெட்டிகளுக்கு கீழே மறைந்திருந்த கடையத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் போலீஸ் சோதனையில் சிக்கினார்.
சரக்கு வாகனம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கும் பொதுமக்கள் வருவது தடை செய்யப்பட்டு உள்ளது. அத்தியாவசிய காரணங்களுக்காக உரிய முன்அனுமதியுடன் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு பால், காய்கறிகள் ஆகிய அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் பாவூர்சத்திரத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வாகனம் கேரள மாநிலம் கோட்டயத்துக்கு சென்றது. பின்னர் அங்கு காய்கறிகளை இறக்கிவிட்டு, அந்த வாகனம் திரும்பி வந்து கொண்டிருந்தது.
போலீசார் சோதனை
தமிழக-கேரள எல்லையான புளியரையை அடுத்த கேரள மாநிலம் ஆரியங்காவு சோதனைச்சாவடியில் வந்தபோது, அந்த வாகனத்தை கேரள போலீசார் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தின் பின்பகுதியில் காய்கறிகள் கொண்டு சென்ற பிளாஸ்டிக் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. போலீசார் அவற்றை எடுக்கச்சொல்லி சோதனையிட்டனர். அப்போது அந்த பெட்டிகளுக்கு கீழே பதுங்கி இருந்த ஒருவர் வெளியே வந்தார். அவரிடம் விசாரித்தபோது, அவர் கடையத்தை சேர்ந்த சங்கர் (வயது 36) என்பதும், கோட்டயத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அங்கு ஓட்டல் அடைக்கப்பட்டதால் அவரால் ஊருக்கு வர முடியவில்லை. இதனால் அவர் அந்த சரக்கு வாகனத்தில் மறைந்து வந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து தென்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கரையும், சரக்கு வாகனத்தின் டிரைவரான கடையத்தை சேர்ந்த அஜித் (22) என்பவரையும் கைது செய்தனர். அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சரக்கு வாகனத்தின் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story