மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த ‘உமிழ்நீர்’ ஜிப்மரில் பரிசோதிக்கப்படுகிறது


மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த ‘உமிழ்நீர்’ ஜிப்மரில் பரிசோதிக்கப்படுகிறது
x
தினத்தந்தி 25 April 2020 6:00 AM IST (Updated: 25 April 2020 5:57 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 1500 பேரின் உமிழ்நீர் கொரோனா பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது.

புதுச்சேரி, 

மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு 1500 பேரின் உமிழ்நீர் கொரோனா பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது.

கொரோனா பரிசோதனை

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக புதுவையில் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் ஏராளமானவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகின்றனர். அவர்களுக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளதா? என்பதை கண்டறிவதில் கால தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் சோதனை ஜிப்மர் மருத்துவ மனையில் மட்டும் நடந்து வந்தது. தற்போது கதிர்காமத்தில் உள்ள புதுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையிலும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தனி விமானம்

புதுவை மாநிலத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் சோதனைக்கு அனுப்பப்படும் மாதிரிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள நோயாளிகளின் உமிழ்நீர் மாதிரிகளை புதுவை ஜிப்மர் மருத்துவமனை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று தனி விமானத்தில் 1,500 பேரின் உமிழ்நீர் மாதிரிகள் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றை ஆம்புலன்ஸ் மூலம் சுகாதார ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜிப்மர் மருத்துவமனையில் இந்த உமிழ்நீர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு மத்திய பிரதேச அரசுக்கு சோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட உள்ளன.

Next Story