கொரோனாவால் முடங்கி கிடந்த வாழைக்காய் மண்டியில் வியாபாரம் சூடு பிடித்தது

திருச்சியில் கொரோனாவால் முடங்கி கிடந்த வாழைக்காய் மண்டியில் வியாபாரம் சூடு பிடித்தது.
திருச்சி,
திருச்சியில் கொரோனாவால் முடங்கி கிடந்த வாழைக்காய் மண்டியில் வியாபாரம் சூடு பிடித்தது.
வாழை சாகுபடி
திருச்சி மாவட்டம் லால்குடி, தொட்டியம், முசிறி, ஜீயபுரம், சோமரசம்பேட்டை, பெட்டவாய்த்தலை, பூவாளூர், திருமங்கலம், சாத்தமங்கலம், மேட்டுப்பட்டி, காட்டூர், கொத்தமங்கலம், அன்பில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 10-ந் தேதி சூறை காற்றுடன் ஏற்பட்ட மழையால் பல இடங்களில் குலைதள்ளி நிலையில் வாழைகள் முறிந்து விழுந்தன. ஏக்கருக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவு செய்து வாழை சாகுபடி செய்த விவசாயிகள் என்ன செய்வதென்று அறியாமல் தவித்து வந்தனர். எனவே, வாழைக்கு ஏக்கருக்கு குறிப்பிட்ட தொகையை அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்தது. மேலும் சில இடங்களில் அறுவடைக்கு கூலி ஆட்கள் கிடைககாமல் குலையிலையே தார்கள் பழுத்து வீணானது.
அழுகி வீணான தார்கள்
கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்தது. திருச்சி காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் இயங்கி வந்த வாழைக்காய் மண்டிக்கு வியாபாரிகள் பெரும்பாலும் வரவில்லை என்றதால், விற்பனை வெகுவாக குறைந்து விட்டது. வாழைக்காய் மண்டியே களை இழந்து காணப்பட்டது.
மண்டியில் விற்பனை ஆகாமல் தேங்கி கிடந்த வாழைத்தார்கள் பழுத்து அழுகி வீணானது. அவை அனைத்தும் குப்பையில் வீசப்பட்டன. ஆடு, மாடுகளுக்கு அவை உணவானது. மிஞ்சிய அழுகிப்போன பழங்களை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அப்புறப்படுத்தி லாரியில் ஏற்றி சென்றனர்.
வியாபாரம் சூடு பிடித்தது
இந்த நிலையில் சமீபத்தில்தான் விவசாயிகள் உற்பத்தி செய்து எடுத்து செல்லும் பொருளுக்கும், வாகனங்களுக்கும் போலீசார் தடை விதிக்கக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் வாழைத்தார்களை அறுவடை செய்து அவற்றை விற்க தொடங்கினர். நேந்திரம் வாழைத்தார்களை பெரும்பாலான வியாபாரிகள் விவசாயிகளின் தோட்டத்திற்கு நேரடியாக சென்று வாங்கி அவற்றை கேரளாவுக்கு லாரியில் அனுப்பி வைத்த வண்ணம் உள்ளனர்.
திருச்சி வாழைக்காய் மண்டிக்கு கற்பூரவல்லி, பூவன், ரொபஸ்டா, விருப்பாட்சி, செவ்வாழை, மொந்தான், ரஸ்தாளி உள்ளிட்ட வாழைத்தார்கள் அதிக அளவில் நேற்று வந்தன. அவை கமிஷன் மண்டி வியாபாரிகளால் ஏலம் விடப்பட்டது. பூவன் பழத்தை தவிர மற்ற வாழைத்தார்களுக்கு அதிக கிராக்கி இருந்தது என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், கொரானாவால் முடங்கி கிடந்த, வாழைக்காய் மண்டியில் வியாபாரம் சூடு பிடித்தது.
Related Tags :
Next Story