புதுக்கோட்டை தற்காலிக மார்க்கெட்டில் காற்றில் பறந்த சமூக இடைவெளி பொதுமக்களை ஒழுங்குபடுத்துவதில் போலீசார் சிரமம்


புதுக்கோட்டை தற்காலிக மார்க்கெட்டில் காற்றில் பறந்த சமூக இடைவெளி பொதுமக்களை ஒழுங்குபடுத்துவதில் போலீசார் சிரமம்
x
தினத்தந்தி 26 April 2020 11:06 AM IST (Updated: 26 April 2020 11:06 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை தற்காலிக மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்காததால், அவர்களை ஒழுங்குபடுத்துவதில் போலீசார் தினமும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை தற்காலிக மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்காததால், அவர்களை ஒழுங்குபடுத்துவதில் போலீசார் தினமும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

முதல் பாதிப்பு

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் மனித உயிர்களை கொன்று குவித்து வருகிறது. இப்படி ஒரு வைரஸ் வந்து மனிதர்களை தாக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கொரோனா என்ற பெயரை கேட்டாலே உலகம் முழுவதும் மக்கள் நடுங்கி வருகின்றனர்.

புதுக்கோட்டையை பொறுத்தவரை மிரட்டுநிலை கிராமத்தில் 23 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று கடந்த 20-ந் தேதி உறுதியானது. இது மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பாகும். மேலும் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

மிரட்டுநிலை கிராமத்தை சுற்றி 8 கி.மீ. அளவில் உள்ள 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதேபோல கிருமி நாசினி தெளிப்பு பணிகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீரும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்காலிக மார்க்கெட்

புதுக்கோட்டையை பொறுத்தவரை கடைகளில் பொருட்கள் வாங்கும் போது பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர். ஆனால் புதுக்கோட்டை பஸ் நிலைய தற்காலிக மார்க்கெட்டில் சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்ததாகவே உள்ளது. இங்கு அதிகாலை முதல் மார்க்கெட் இயங்குகிறது. மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் அதிகாலை 4.30 மணிக்கு மேல் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். அதிகாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் பலர் காய்கறிகள் வாங்க வருகின்றனர். இதில் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணிந்தபடி வருவதை காணமுடிகிறது. ஒரு சிலர் முக கவசம் அணியாமல் வருகின்றனர். அவர்களை நுழைவுவாயிலேயே போலீசார் தடுத்து எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனர். சிலர் கைக்குட்டைகளையும், துண்டுகளையும் முகத்தில் மூடியபடி வருகின்றனர். அவர்களையும் போலீசார் எச்சரித்து மார்க்கெட் உள்ளே அனுமதிப்பதில்லை.

போலீசார் எச்சரிக்கை

இந்த நிலையில் பஸ்கள் நிற்குமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கடைகளில் காய்கறிகள் வாங்கும் போது சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிப்பதில்லை. ஒருவருக்கொருவர் அருகில் நின்றுக்கொண்டு தான் காய்கறிகள் வாங்குவதை காண முடிந்தது.

இதேபோல வியாபாரிகளும் அருகருகே அமர்ந்து வியாபாரம் செய்கின்றனர். பொதுமக்கள் சிலர் முக கவசங்களை கழற்றிவிட்டு வியாபாரிகளிடம் பேசி காய்கறிகள் வாங்குகின்றனர். இதுபோன்ற நபர்களை போலீசார் கண்டதும், ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர். நகராட்சி அதிகாரிகளும் ஒலிபெருக்கியில் அவ்வப்போது அறிவுரைகளை வழங்குகின்றனர். மேலும் முக கவசம் அணியாதவர்களை போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் திருப்பி அனுப்பினர்.

மருந்து கடைகள்

உழவர் சந்தையில் பொருட்கள் வாங்கும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பஸ் நிலைய தற்காலிக மார்க்கெட்டில் அதுபோன்ற வசதி எதுவும் இல்லை. அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் வாகனங்களில் வரும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் கடைவீதியில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

சமூக இடைவெளி, தனித்திரு, விழித்திரு, வீட்டிலிரு என விழிப்புணர்வு ஏற்படுத்தினால் சிலர் கடைபிடிப்பதில்லை. இதனை அனைவரும் கடைபிடித்தால் கொரோனாவை முற்றிலும் விரட்டி விட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Next Story