குறை மாதத்தில் 900 கிராம் எடையுடன் பிறந்த பச்சிளம் குழந்தையை நலம் பெற செய்த அரசு மருத்துவமனை டாக்டர்கள்


குறை மாதத்தில் 900 கிராம் எடையுடன் பிறந்த பச்சிளம் குழந்தையை நலம் பெற செய்த அரசு மருத்துவமனை டாக்டர்கள்
x
தினத்தந்தி 27 April 2020 4:39 AM IST (Updated: 27 April 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

குறை மாதத்தில் 900 கிராம் எடையுடன் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை அரசு மருத்துவமனை டாக்டர்கள் நலம் பெற செய்தனர்.

மன்னார்குடி, 

குறை மாதத்தில் 900 கிராம் எடையுடன் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை அரசு மருத்துவமனை டாக்டர்கள் நலம் பெற செய்தனர்.

6-வது மாதத்தில் பிறந்த குழந்தை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருப்பத்தூரை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. 6-வது மாதத்திலேயே அந்த குழந்தை பிறந்ததால் 900 கிராம் எடையுடன் மிகவும் பலவீனமாக இருந்தது.

குறை மாதத்தில் பிறந்த அந்த குழந்தை மருத்துவமனையின் பச்சிளங்குழந்தை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. டாக்டர்கள் சரவணகுமார், உமா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடந்த 3 மாதங்களாக அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

நலம் அடைந்தது

மூச்சுத்திணறல், தீவிர நோய்த்தொற்று, கடுமையான ரத்தசோகை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அந்த குழந்தைக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைக்கு ரத்தமும் செலுத்தப்பட்டு வந்தது.

டாக்டர்களின் விடா முயற்சி மற்றும் தீவிர சிகிச்சையின் பலனாக அந்த குழந்தை நலம் அடைந்தது. தற்போது அந்த குழந்தையின் எடை 1,700 கிராமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் முன்னிலையில் அந்த குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

செலவின்றி...

குறை மாதத்தில் குறைந்த எடையுடன் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற பல லட்சம் ரூபாய் செலவாகும். இந்த நிலையில் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குறை மாதத்தில் பிறந்த குழந்தையை டாக்டர்கள் செலவின்றி காப்பாற்றி உள்ளனர். அரசு மருத்துவமனை டாக்டர்களின் முயற்சிக்கு குழந்தையின் பெற்றோர் மற்றும் மன்னார்குடி பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Next Story