புதிதாக யாருக்கும் தொற்று இல்லை: குமரியில் கொரோனா பாதித்த பகுதியில் தடை நீங்குவது எப்போது? அதிகாரி தகவல்

குமரியில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாததால், கொரோனா பாதித்த பகுதியில் தடை நீங்குவது எப்போது? என அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரியில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படாததால், கொரோனா பாதித்த பகுதியில் தடை நீங்குவது எப்போது? என அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
16 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரம் மற்றும் தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். அதாவது அனந்தசாமிபுரத்தில் 6 பேரும், வெள்ளாடிச்சிவிளையில் 6 பேரும், தேங்காப்பட்டணத்தில் 3 பேரும், டென்னிசன் தெருவில் ஒருவரும் என மொத்தம் 16 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதில் அனந்தசாமிபுரத்தில் ஒருவரும், தேங்காப் பட்டணத்தில் 3 பேரும், டென்னிசன் தெருவில் ஒருவரும் என மொத்தம் 5 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வெள்ளாடிச்சிவிளையில் பாதிக்கப்பட்டு இருந்த தந்தையும், மகனும் கொரோனாவில் இருந்து மீண்டனர். ஆனால் அவர்களின் குடும்பத்தினர் இன்னும் கொரோனா பாதிப்பில் இருந்து மீளவில்லை. இதன் காரணமாக 2 பேரும் ஆஸ்பத்திரியிலேயே தங்கி உள்ளனர்.
மீண்டும் பரிசோதனை
இதை தொடர்ந்து மீதமுள்ள 9 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வெள்ளாடிச்சிவிளையை சேர்ந்த குழந்தை உள்பட 3 பேர் குணமடைந்து வருவதாக டாக்டர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அந்த 3 பேருக்கும் இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை (செவ்வாய்க்கிழமை) மீண்டும் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
அதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் ஏற்கனவே குணமான தந்தை, மகன் உள்பட 5 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கண்காணிப்பு அதிகாரி
இதுபற்றி குமரி மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் கேட்ட போது,
“கடந்த 12 நாட்களாக யாருக்கும் நோய் தொற்று இல்லை. எனவே குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை மே 3-ந் தேதிக்குள் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் முயற்சி செய்து வருகிறோம்.
சென்னை மற்றும் மும்பையில் இருந்தோ அல்லது நோய் பாதிப்பு அதிகமுள்ள ஊரில் இருந்தோ யாரும் குமரி மாவட்டத்திற்குள் வராமல் இருந்தால் நோய் பாதிப்பு பரவ வாய்ப்புகள் இல்லை“ என்றார்.
தடை நீங்குவது எப்போது?
குமரி மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் தற்போது வீடு திரும்பி வருவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனாலும் கொரோனா பாதித்த பகுதிகளில் எப்போது தடை நீங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது.
இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் ஒரு பகுதியில் நோய் தோற்று ஏற்பட்ட நாளில் இருந்து 28 நாட்கள் வரை பாதிக்கப்பட்ட பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாகவே கருதப்படும். எனவே தொடர்ந்து 28 நாட்கள் நோய் பாதிப்பு இல்லை எனில் தடையானது நீக்கப்படும். ஆனால் தடையை நீக்குவது குறித்து கலெக்டர் தான் முடிவு செய்வார்“ என்றார்.
Related Tags :
Next Story