கொரோனா பாதித்த மேலும் 2 பேர் ‘டிஸ்சார்ஜ்’: தூத்துக்குடியில் இதுவரை 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் - ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை


கொரோனா பாதித்த மேலும் 2 பேர் ‘டிஸ்சார்ஜ்’: தூத்துக்குடியில் இதுவரை 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் - ஒருவருக்கு மட்டுமே சிகிச்சை
x
தினத்தந்தி 28 April 2020 4:45 AM IST (Updated: 27 April 2020 11:14 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர். இதுவரை 25 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  

அதில் 27 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவர்கள் தூத்துக்குடி மற்றும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் ஒரு மூதாட்டி மட்டும் பரிதாபமாக இறந்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த 18 பேரும், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் 2 பேர் ‘டிஸ்சார்ஜ்‘

இந்த நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போல்டன்புரத்தை சேர்ந்த 2 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்‘ செய்யப்பட்டனர். அவர்களுக்கு டீன் திருவாசகமணி, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் பழங்களை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 25 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்னும் ஒருவர் மட்டும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார். அவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் விரைவில் அவரும் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story